மாவட்ட செய்திகள்

திருச்சி அருகே 40 நிமிடத்தில் 60 வகையான பாரம்பரிய உணவுகளை செய்து அசத்திய பள்ளி மாணவி

வையம்பட்டி அருகே 8-ம் வகுப்பு மாணவி 40 நிமிடத்தில் 60 வகையான பாரம்பரிய உணவு வகைகளை செய்து சாதனை முயற்சியில் ஈடுபட்டது அனைவரின் கவனத்தையும் வெகுவாக ஈர்த்துள்ளது.

தினத்தந்தி

திருச்சி மாவட்டம், வையம்பட்டியை அடுத்த கல்பட்டியை சேர்ந்தவர் ஜெகநாதன். இவரது மனைவி புவனேஷ்வரி அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு ரித்திகா என்ற 10 வயது மகளும், தர்ஷினி என்ற 13 வயது மகளும் உள்ளனர். இருவரும் திண்டுக்கல்லில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர்.

இந்த குடும்பத்தினர் தங்களின் வீடுகளில் பல்வேறு வகையான மூலிகை செடிகளை வளர்த்து வருவதுடன் அந்த மூலிகை செடி மற்றும் பாரம்பரியமிக்க உணவு வகைகளை தான் பெரும்பாலான நேரங்களில் சமைத்து சாப்பிட்டு வந்துள்ளனர். இதனால் பாரம்பரிய உணவு வகைகளின் மீது மாணவி தர்ஷினிக்கு ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து நவீன உலகில் மக்கள் மறந்து வரும் பாரம்பரிய உணவு வகைகளை மீண்டும் வழக்கமான உணவாக கொண்டு வரும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக உலக சாதனை நிகழ்ச்சிக்கு திட்டமிட்டிருந்தார். அதன்படி ஒரு மணி நேரத்தில் பாரம்பரியமிக்க 55 வகையான உணவுகள் செய்யவும் முடிவு செய்திருந்தார்.

அதன்படி யுனிவெர்செல் அச்சிவர்ஸ் புக் ஆப் ரெக்கார்டுஸ், பியூச்சர் கலாம் புக் ஆப் ரெக்கார்டுஸ் சார்பில் உலக கின்னஸ் சாதனைக்காக முயற்சி நேற்று கல்பட்டியில் உள்ள தர்ஷினி வீட்டில் நடைபெற்றது. இதையடுத்து மாப்பிள்ளை சம்பா சுவீட், கவுனிஅரிசியில் புட்டு, சர்க்கரை துளசியில் லெசி, கம்மங்கூழ், வெற்றிலை தோசை, தினை தோசை என்று மொத்தம் 60 வகையான நமது பாரம்பரியமிக்க உணவு வகைகளை 40 நிமிடத்தில் செய்து அசத்தினார். இந்த நிகழ்வு முடிந்ததும் அதற்கான சான்று மற்றும் கேடயம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வை பலரும் பார்த்து வியந்தனர்.

இதுபற்றி மாணவியின் தாய் புவனேஷ்வரி கூறும் போது, எங்கள் வீட்டில் பல்வேறு வகையான மூலிகை செடிகள் உள்ளது. அதிலிருந்து தான் தினமும் ஏதாவது ஒரு பாரம்பரிய உணவு வகைகளை சமைப்போம். இதனால் எனது மகளுக்கும் பாரம்பரிய உணவுகளின் மீது ஒரு ஈர்ப்பு ஏற்பட்டதுடன் மக்கள் பலரும் பாரம்பரிய உணவுகளை மறந்து விட்ட நிலையில் அதுதொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும், உலக சாதனை முயற்சிக்காகவும் இந்த நிகழ்வு நடைபெற்றது என்று கூறினார்.

இதுபற்றி மாணவி தர்ஷினி கூறும் போது, பாரம்பரிய உணவு வகைகளை மக்கள் மீண்டும் தங்களின் வழக்கமான வாழ்வில் உணவாக கொண்டு வருவதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த சாதனை முயற்சியை மேற்கொண்டதாக கூறினார்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு