மாவட்ட செய்திகள்

பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம்: டிரைவருக்கு ஆயுள் தண்டனை - கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

பள்ளி மாணவியை கட்டாய திருமணம் செய்து பாலியல் பலாத்காரம் செய்த டிரைவருக்கு ஆயுள் தண்டனை விதித்து கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு கூறியது.

தினத்தந்தி

கடலூர்,

கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே ஊத்தாங்கால் பகுதியை சேர்ந்தவர் ராசு. இவருடைய மகன் அருண்பாண்டியன் (வயது 27). டிப்ளமோ படித்துள்ள இவர் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த 17 வயது பிளஸ்-2 மாணவி பள்ளிக்கு செல்லும் போதும், பள்ளி முடிந்து வீட்டுக்கு திரும்பி செல்லும் போதும் பின் தொடர்ந்து சென்றார். பின்னர் அந்த மாணவியிடம் அவரை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசைவார்த்தை கூறினார்.

இந்நிலையில் கடந்த 2016-ம் ஆண்டு ஜூலை மாதம் கடைசி வாரத்தில் அந்த மாணவியை தனியாக வரவழைத்து, மந்தாரக்குப்பத்தில் இருந்து நெய்வேலி டவுன்ஷிப் செல்லும் வழியில் உள்ள தைலமர தோப்புக்குள் அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். மேலும் அந்த மாணவி தனியாக இருக்கும் போது, அருண்பாண்டியன் அவரது வீட்டுக்கு சென்று பேசினார்.

இதை அறிந்த மாணவியின் உறவினர்கள், அருண்பாண்டியன் மீது போலீசில் புகார் கொடுக்க உள்ளதாக தெரிவித்தனர். இதனால் கடந்த 5.9.2019 அன்று அவர், அந்த மாணவியை தனது தாய், தந்தை மற்றும் உறவினர்கள் முன்னிலையில் அவரது வீட்டுக்கு அருகில் உள்ள மாரியம்மன் கோவிலில் வைத்து கட்டாய திருமணம் செய்தார்.

அதன்பிறகும் அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தார். தொடர்ந்து அந்த மாணவியை தனியாக விட்டு, விட்டு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ய ஏற்பாடு செய்தார். அருண்பாண்டியனுக்கு உடந்தையாக அவரது உறவினர்கள் 6 பேர் செயல்பட்டனர். இது பற்றி அறிந்ததும் சிறுமியின் தாய், நெய்வேலி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அருண்பாண்டியன் உள்பட 7 பேரை கைது செய்தனர். இந்த வழக்கு கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இவ்வழக்கில் அனைத்து விசாரணைகளும் முடிவடைந்த நிலையில், நேற்று நீதிபதி எழிலரசி தீர்ப்பு கூறினார்.

அதில், இவ்வழக்கில் அருண்பாண்டியன் குழந்தை திருமணம் செய்த குற்றத்திற்காக அவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1000 அபராதமும், பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

மற்ற 6 பேர் மீதான குற்றம் நிரூபிக்கப்படாததால், அவர்களை விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கலாசெல்வி ஆஜராகி வாதாடினார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்