மும்பை,
மும்பை காட்கோபர் மேற்கு பகுதியில் உள்ள அரசு பஸ் பணிமனை அருகே நேற்று காலை 10 மணியளவில் சிலர் நடந்து சென்றுகொண்டிருந்தனர். அப்போது, அந்த பகுதியில் ரத்தம் தோய்ந்த நிலையில் பெண் உடல் ஒன்று கிடந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள் சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீசார் அந்த உடலை பார்வையிட்டனர். இதில், அந்த உடல் தலை, கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் கிடந்தது. இதையடுத்து போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் பிணமாக மீட்கப்பட்ட பெண் யார்?, கொலையாளிகள் யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சமீபகாலமாக மும்பை, தானேயில் மனிதர்களை கொலை செய்து உடலை துண்டு, துண்டாக வெட்டி பாகங்களை வீசும் சம்பவங்கள் அதிகரித்து உள்ளன. சமீபத்தில் சாந்தாகுரூசில் வளர்ப்பு மகள், தந்தையை காதலனுடன் சேர்ந்து கொலை செய்து, உடலை துண்டு துண்டாக வெட்டி வீசினார்.
இதேபோல தானே மாவட்டத்தில் வேறு சமூக வாலிபரை காதலித்த மகளை, தந்தையே கொலை செய்து உடலை துண்டாக வெட்டி வீசிய சம்பவமும் நடந்து உள்ளது.