வேலூர்,
வேலூர் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்தவர் ராஜமாணிக்கம். இவர் வாகன தணிக்கையின்போது, குறிப்பாக பெண்கள் ஓட்டிவரும் வாகனங்களை நிறுத்தி, ஆவணங்கள் இல்லையென்றால் அவர்களுக்கு அபராதம் விதித்துள்ளார்.
அப்போது பெண்களிடம் அவர்களுடைய செல்போன் எண்களை வாங்கிவைத்துக்கொண்டு, அந்த செல்போன்களுக்கு இரவு நேரத்தில் ஆபாச வீடியோக்களை அனுப்பியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்கள் அவர்களுடைய உறவினர்களிடம் தெரிவித்துள்ளனர்.
அதைத்தொடர்ந்து அவர்கள் கடந்த 25-ந் தேதி சப்-இன்ஸ்பெக்டர் ராஜமாணிக்கத்திடம் இதுகுறித்து கேட்டுள்ளனர். அப்போது அவர், அவர்களிடம் மன்னிப்பு கேட்பது போன்ற வீடியோ காட்சிகள் சமூகவலைத்தளங்களில் பரவியது.
இதுபற்றி தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார், போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் ராஜமாணிக்கத்தை ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டார். மேலும் அவர் ஆபாச வீடியோக்கள் அனுப்பியது குறித்து விசாரிக்க துணைபோலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணனுக்கு உத்தரவிட்டார்.
அவர் நடத்திய விசாரணையில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜமாணிக்கம் ஆபாச வீடியோக்கள் அனுப்பியது உறுதியானது. இதுகுறித்து துணைபோலீஸ்சூப்பிரண்டு பாலகிருஷ்ணன், போலீஸ் சூப்பிரண்டுக்கு அறிக்கை சமர்ப்பித்தார். அதைத்தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் ராஜமாணிக்கத்தை பணியிடைநீக்கம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.