அம்மாபேட்டை,
அம்மாபேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் 11 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வந்தது. நெடுஞ்சாலைகளில் உள்ள கடைகளை அகற்றவேண்டும் என்ற கோர்ட்டு உத்தரவின் பேரில் 9 கடைகள் அடைக்கப்பட்டன. எஞ்சிய 2 கடைகள் அம்மாபேட்டையிலும், சித்தாரிலும் செயல்பட்டு வந்தது.
சின்னகுரும்பபாளையம், பெரிய குரும்பபாளையம், குறிச்சி, பெரிய ஆண்டிபாளையம் ஆகிய பகுதிகளை சேர்ந்த மக்கள் சித்தார் டாஸ்மாக் கடை அமைந்துள்ள வழியாகத்தான் தங்களுடைய ஊர்களுக்கு சென்றுவரவேண்டும். இந்தநிலையில் அம்மாபேட்டை பகுதியில் இருந்த 9 டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டதால் குடிமகன்கள் சித்தார் டாஸ்மாக் கடையில் எந்நேரமும் குவிந்தார்கள். இதனால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டது. அதனால் டாஸ்மாக் கடையை அகற்றவேண்டும் என்று கடந்த 15 நாட்களுக்கு முன் அதிகாரிகளிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தார்கள். ஆனால் சித்தாரில் டாஸ்மாக் கடை தொடர்ந்து செயல்பட்டு வந்தது.
முற்றுகை போராட்டம்
இந்தநிலையில் சின்னகுரும்பபாளையம், பெரிய குரும்பபாளையம், குறிச்சி, பெரிய ஆண்டிபாளையத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேற்று காலை 11 மணி அளவில் சித்தார் டாஸ்மாக் கடைக்கு சென்று, கடையை உடனே அகற்றவேண்டும் என்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் பவானி தாசில்தார் குணசேகரன், ஈரோடு மாவட்ட டாஸ்மாக் உதவி மேலாளர் குப்புராஜ், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் (சித்தோடு), கோவிந்தராஜ் (பவானி) ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு இருந்த பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
டாஸ்மாக்கடை மூடல்
அப்போது பொதுமக்கள் அதிகாரிகளிடம், இன்னும் சில நாட்களில் பள்ளிக்கூடம் திறந்துவிடும். மாணவ-மாணவிகள் சைக்கிளில் இந்த வழியாகத்தான் செல்லவேண்டும். குடிகாரர்கள் ரோட்டிலேயே விழுந்து கிடக்கிறார்கள். நாங்கள் என்ன செய்வது? உடனே கடையை மூடுங்கள் என்றார்கள். இதனால் அதிகாரிகள் உடனே சித்தார் டாஸ்மாக் கடையை மூடினார்கள். மேலும் கடைக்குள் இருக்கும் மதுபாட்டில்களை 2 நாட்களில் வேறு இடத்துக்கு கொண்டு சென்று விடுவதாகவும் உறுதி அளித்தார்கள். இதனால் முற்றுகை போராட்டம் முடிவுக்கு வந்தது.