மாவட்ட செய்திகள்

கொரோனாவை கட்டுப்படுத்துவதில் அலட்சியம் கூடாது , முதல்-அமைச்சர் நாராயணசாமி அறிவுறுத்தல்

கொரோனாவை கட்டுப்படுத்துவதில் பொதுமக்களிடையே ஒத்துழைப்பு இல்லை. எனவே அலட்சியம் கூடாது என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார். புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தினத்தந்தி

புதுச்சேரி,

கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து நடவடிக்கை எடுத்து வருகிறோம். வெளிநாட்டவர் அதிக அளவில் நமது மாநிலத்துக்கு சுற்றுலா வருவதால் தீவிர கண்காணிப்பு செய்யப்படுகிறது. இதுவரை 24 பேருக்கு கொரோனா தொற்று உள்ளதா? என்று சோதனை நடத்தப்பட்டது. அதில் மாகி பகுதியை சேர்ந்த மூதாட்டி ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது.

அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அவரை சார்ந்த குடும்பத்தினருக்கும் பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,200 பேர் அவர்களது இருப்பிடங்களில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனர்.

புதுவையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் வெளியில் நடமாட வேண்டாம் என்று கைகூப்பி கேட்டுக்கொள்கிறேன். நேற்று இரவு பிரதமரும் 21 நாட்கள் ஊரடங்கு அறிவித்துள்ளார். எனவே பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியே வரக் கூடாது. ஏப்ரல் 14-ந் தேதி வரை இதை கடை பிடிக்கவேண்டும்.

இந்த தொற்றின் தாக்கம் தற்போது அதிகமாக தெரிகிறது. இத்தாலியில் நாள்தோறும் பலர் இறக்கின்றனர். இந்த நோய்க்கு மருந்து இல்லாததால் இறப்பு அதிகரிக்கிறது. அரசு ஊழியர்களில் அத்தியாவசிய துறைகளில் பணியாற்றும் ஊழியர்கள் தவிர வேறு யாரும் பணிக்கு வரவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவர்கள் வீடுகளில் இருந்து பணியாற்ற கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அதிகாரிகளை அழைத்து பேசி உள்ளேன். நமது மாநில மக்களுக்கு தேவையான அரிசி, கோதுமை உள்ளிட்ட உணவு பண்டங்கள் நம்மிடம் போதுமான அளவில் உள்ளது. காய்கறிகளும் வெளிமாநிலங்களில் இருந்து வருகின்றன. அதேபோல் பால் தட்டுப்பாடும் இல்லை. உணவு பொருட்கள் கிடைக்காதோ என்ற பயத்தில் மக்கள் வெளியே நடமாட வேண்டாம்.

மக்கள் நடமாட்டம் இப்போது ஓரளவுக்கு கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது. ஆனால் நகரத்தை ஒட்டிய பகுதிகள், கிராமப்புற பகுதிகளில் அதிக மக்கள் நடமாட்டம் உள்ளது. இதை கட்டுப் படுத்தும் பொறுப்பு காவல் துறைக்கும் உள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 11 பேர் இறந்துள்ளனர். தமிழகத்திலும் ஒருவர் இறந்துள்ளார். புதுவையில் அதுபோல் அசம்பாவிதம் ஏதும் இல்லை. ஆனால் நாம் அலட்சியமாக இருந்துவிடக்கூடாது. ஏப்ரல் 14-ந்தேதி வரை கட்டுப்பாடுகளை மக்கள் கடைபிடிக்க வேண்டும்.

வதந்திகளை நம்பவேண்டாம். அரசின் உத்தரவுகளை நாங்கள் தொடர்ந்து மக்களுக்கு தெரிவிப்போம். இப்போதும் மக்களிடையே முழுமையான ஒத்துழைப்பு இல்லை. எனவே அரசின் கட்டுப்பாட்டுக்கு அனைவரும் ஒத்துழைப்பு தரவேண்டும். திருமணங்கள் நடத்தவேண்டும் என்றால் கலெக்டரிடம் அனுமதி பெற்று குறைந்த அளவு உறவினர்களுடன்தான் நடத்த வேண்டும்.

தற்போது அரசு மருத்துவ மனைகளில் பயன்படுத்த 8 வெண்டிலேட்டர், மல்டி பாராமீட்டர் மானிட்டர், இ.சி.ஜி. மெஷின் உள்ளிட்ட உபகரணங்கள் வாங்கப்பட்டுள்ளன. இதில் காரைக்கால் மருத்துவமனைக்கு 2 வெண்டிலேட்டரும், மாகி, ஏனாமுக்கு தலா ஒரு வெண்டிலேட்டரும் அனுப்பிவைக்கப்படும். மருத்துவ உபகரணங்கள் வாங்கிட தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் சமூக பங்களிப்பு திட்டத்தின்கீழ் உதவிட வேண்டும்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக மத்திய அரசு இடைக்காலமாக ரூ.200 கோடி வழங்க கடிதம் எழுதி உள்ளேன். பிரதமரும் இதற்காக ரூ.15 ஆயிரம் கோடி ஒதுக்குவதாக அறிவித்துள்ளார். எனவே புதுவை மாநிலத்துக்கு கணிசமான நிதி தரவேண்டும். எம்.பி.க்கள் தலா 3 வெண்டிலேட்டர்கள் வாங்க நிதி தருவதாக கூறியுள்ளனர். எம்.எல்.ஏ.க்களும் தங்கள் தொகுதி மேம்பாட்டு நிதியில் 30 சதவீதத்தை தரவேண்டும். தனியார் நிதி வழங்க வசதியும் ஏற்படுத்தி உள்ளோம். இதற்கு வருமான வரி விலக்கும் உண்டு.

மத்திய அரசிடமிருந்து இதுவரை நிதி எதுவும் பெறப்படவில்லை. அரசு ஆஸ்பத்திரிகளில் வெண்டிலேட்டர் வசதிகளை உருவாக்கிட ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்கள் உதவிட கடிதம் எழுதி உள்ளேன்.

இவ்வாறு முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்