கரூர்,
ஊராட்சிகளில் பணிபுரியும் நீர்த்தேக்க தொட்டி ஆபரேட்டர்களுக்கு 30 சதவீதம் ஊதிய உயர்வு வழங்கிட வேண்டும். சிறப்பு காலமுறை ஊதிய துப்புரவு பணியாளர்களுக்கு ஊதியக்குழு பரிந்துரைப்படி ஊதிய உயர்வு, பணிக்கொடை, ஓய்வூதிய அரசாணையை வெளியிட வேண்டும். 3 ஆண்டு பணிமுடித்த தொகுப்பூதிய துப்புரவு தொழிலாளர்களை நிரந்தரமாக்கி ஊதிய உயர்வு வழங்கிட வேண்டும். குறைந்தபட்ச ஊதிய அரசாணைப்படி சம்பளம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூன் 18-ந் தேதி கரூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என கரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கத்தினர் அறிவித்திருந்தனர். அந்த வகையில் மாவட்ட செயலாளர் கந்தசாமி தலைமையில் மாவட்ட தலைவர் ராஜூ உள்பட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் நேற்று கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் ஜீவானந்தம், மாவட்ட செயலாளர் முருகேசன் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைளை விளக்கி பேசினர்.
இந்த நிலையில் கலெக்டர் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த கரூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கும்மராஜா மற்றும் போலீசார், முற்றுகை போராட்டம் நடத்தியதாக 118 பேரை கைது செய்து அரசு பஸ்சில் ஏற்றினர். இதில் 30 பேர் பெண்கள் ஆவர். கைதானவர்கள் கரூர் தாந்தோன்றிமலையில் உள்ள ஒரு மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர்.