மாவட்ட செய்திகள்

கழிவுநீரில் அமர்ந்து பொதுமக்கள் போராட்டம் - விருத்தாசலம் அருகே பரபரப்பு

விருத்தாசலம் அருகே கழிவுநீரில் அமர்ந்து பொதுமக்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

விருத்தாசலம்,

விருத்தாசலம் அருகே உள்ள பரவளூர் ஊராட்சியில் ஆதிதிராவிடர்கள் குடியிருப்பு அமைந்துள்ளது. இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து கழிவுநீர் வெளியேறும் வகையில் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் தெருக்களில் அமைக்கப்பட்ட இந்த கால்வாயில் இருந்து கழிவுநீர் வழிந்து செல்வதற்கு வசதியாக இதுவரை வடிகால் அமைக்கப்படவில்லை. இதனால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்ல வழியின்றி தெருக்களிலேயே தேங்கி நிற்கிறது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் அப்பகுதியில் தேங்கி நிற்கும் கழிவுநீருடன் மழைநீரும் கலந்து குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்து நிற்கிறது. இதனால் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், அப்பகுதி மக்கள் காய்ச்சல், சளி உள்ளிட்ட பிரச்சினைகளால் அவதிப்படுகின்றனர். இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் நேற்று காலை சாலையில் தேங்கி இருந்த கழிவுநீரில் அமர்ந்து நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த விருத்தாசலம் போலீசார் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது அதிகாரிகள், வடிகால் அமைக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதன் பேரில் பொதுமக்கள் வடிகால் அமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்காவிட்டால் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என கூறி விட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்