ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது. ஊட்டி, குன்னூர், மஞ்சூர், பந்தலூர், கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. ஊட்டி உசில்மேடு பகுதியில் மரம் ஒன்று முறிந்து சாலையின் குறுக்கே விழுந்தது. இதை அறிந்த ஊட்டி தீயணைப்பு வீரர்கள் மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினார்கள்.
ஊட்டி காபிஹவுஸ் பின்பகுதியில் குடியிருப்புகள் அருகே திடீரென நேற்று முன்தினம் நள்ளிரவு பள்ளம் ஏற்பட்டது. இதனை காலையில் எழுந்து பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். மழை பெய்ய, பெய்ய பள்ளம் பெரிதாகிக்கொண்டே போனது. அப்பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சாக்கடை கால்வாய்க்காக குழாய் அமைக்கும் பணி நடைபெற்றது. இதனால் அதன் காரணமாக ஏற்பட்ட பள்ளமா? என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.