மாவட்ட செய்திகள்

ஊத்துக்குளி அருகே விசுவ இந்து பரிஷத் மாவட்ட செயலாளர் வீடு மீது கல்வீச்சு; கண்காணிப்பு கேமரா உடைப்பு, 24 பேர் மீது வழக்குப்பதிவு

ஊத்துக்குளி அருகே விசுவ இந்து பரிஷத் மாவட்ட செயலாளரின் வீட்டின் மீது கல் வீசப்பட்டதோடு அந்த வீட்டின் முன்பு பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவும் உடைத்து நொறுக்கப்பட்டது. இது தொடர்பாக 24 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தினத்தந்தி

ஊத்துக்குளி,

ஊத்துக்குளி அருகே உள்ள சிட்கோ முதலிபாளையம் எஸ்.வி. புதூரை சேர்ந்தவர் வசந்த் (வயது 36). இவர் விசுவ இந்து பரிஷத் திருப்பூர் மாவட்ட செயலாளராக இருந்து வருகிறார்.

இவருடைய தாயார் தங்கபுஷ்பம் ஊத்துக்குளி போலீசில் கொடுத்துள்ள புகார் மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

சம்பவத்தன்று இரவு எனது மகன் வசந்த் வேலைக்கு சென்று விட்டார். இதனால் நானும் எனது மருமகள் ஜெயகலா மற்றும் எனது 2 மாத பேத்தி ஆகியோர் மட்டும் வீட்டில் இருந்தோம். அப்போது எங்கள் வீட்டின் கூரை மீது கற்கள் வந்து விழுந்தன. உடனே நான் வெளியே வந்து பார்த்தபோது பாஸ்கர், சந்திரசேகர், தினேஷ், ராஜசேகர், பவன்ராஜ், ஆனந்த் உள்பட ஏராளமானவர்கள் நிற்பது தெரிய வந்தது.

அப்போது அவர்கள் என்னையும், எனது மருமகளையும் ஆயுதத்தால் தாக்க வந்தனர். வீட்டின் கண்காணிப்பு கேமரா, பிரதான கேட் மற்றும் கதவு மற்றும் வீட்டின் மேற்கூரையை உடைத்தனர். எங்களையும், எங்களது காரையும் பெட்ரோல் ஊற்றி எரித்து விடுவோம் என்று மிரட்டினார்கள். எனவே எங்களை மிரட்டியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்ய வேண்டும். மேலும் எங்களது உயிருக்கும், உடைமைக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் விசாரித்து, பாஸ்கர், சந்திரசேகர், தினேஷ், ராஜசேகர், பவன்ராஜ், ஆனந்த் உள்பட 24 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த சம்பவத்தினால் பதற்றமாக உள்ள சிட்கோ முதலிபாளையம் பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு