விழுப்புரம்,
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் பணியாற்றி வரும் விற்பனையாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்திற்கு இணையாக ரேஷன் கடை பணியாளர்களுக்கும் ஊதியம் வழங்க வேண்டும் மற்றும் பணிவரன்முறை, ஓய்வூதியம் உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 11-ந் தேதி முதல் தமிழகம் முழுவதும் தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர் சங்கத்தினர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டத்திலும் இந்த சங்கத்தை சேர்ந்த பணியாளர்கள் கடந்த 2 நாட்களாக தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் நேற்று 3-வது நாளாக இவர்களின் போராட்டம் நீடித்தது.
இந்தநிலையில் போராட்டத்தை தீவிரப்படுத்தும் விதமாக மாவட்ட தலைநகரான விழுப்புரத்தில் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே நேற்று காலை கோரிக்கைகளை வலியுறுத்தி ரேஷன் கடை பணியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சம்பத் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் தன்ராஜ், கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட இணை செயலாளர் கோபிநாத் அனைவரையும் வரவேற்றார். தமிழ்நாடு அரசு பணியாளர் நூலகத்துறை சங்க மாநில செயலாளர் சிவக்குமார், டாஸ்மாக் பணியாளர் சங்க மாநில பொருளாளர் ஜெய்கணேஷ் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
இதில் நிர்வாகிகள் ஏழுமலை, தனசேகரன், ரவி, விஜி, மாயவன், மயில்வேல் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் ராஜ் நன்றி கூறினார்.