பெங்களூரு,
கர்நாடக மாநிலம் உருவான தினத்தையொட்டி மாநிலம் முழுவதும் கன்னட ராஜ்யோத்சவா விழா கொண்டாடப்பட்டது. இந்த நிலையில், ஐதராபாத்-கர்நாடக மாவட்டங்களான பீதர், கலபுரகி, யாதகிரி, கொப்பல், ராய்ச்சூர், பல்லாரி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்த்து தனிமாநிலமாக உருவாக்க வேண்டும் என்று கல்யான் கர்நாடக போராட்ட அமைப்பு தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறது.
இந்தநிலையில், நேற்று கல்யான் கர்நாடக போராட்ட அமைப்பை சேர்ந்தவர்கள் கலபுரகி டவுனில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்க்கிளில் தனி மாநிலம் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கலபுரகி, பீதர் உள்ளிட்ட சில மாவட்டங்களின் பெயர்களுடன் கூடிய சிவப்பு நிற கொடியை கையில் ஏந்தி இருந்தனர்.
பின்னர், அவர்கள் தனிமாநிலம் கோரி கோஷமிட்டனர். அத்துடன் அங்கு தனிமாநிலத்துக்கான கொடியை அவர்கள் ஏற்ற முயன்றனர். இதை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்து நிறுத்தியதோடு, போராட்டத்தில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்டோரையும் கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.