மாவட்ட செய்திகள்

சப்-இன்ஸ்பெக்டர் சுட்டுக்கொலை: நெல்லை வாலிபர் வீட்டில் போலீசார் அதிரடி சோதனை - தந்தையிடம் துருவி, துருவி விசாரணை

களியக்காவிளை அருகே சப்-இன்ஸ்பெக்டர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக நெல்லை வாலிபர் வீட்டில் போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினர். மேலும், அவருடைய தந்தையிடம் துருவி, துருவி விசாரணை நடத்தப்பட்டது.

தினத்தந்தி

பேட்டை,

குமரி மாவட்டம் களியக்காவிளை அருகே உள்ள போலீஸ் சோதனைச்சாவடியில், பணியில் இருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் நேற்று முன்தினம் இரவு மர்மநபர்களால் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார். இது தொடர்பாக குமரி மாவட்டம் மட்டுமல்லாமல் நெல்லை மாவட்டத்திலும் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர்.

கொலையாளிகள் நெல்லைக்கு தப்பி வந்திருக்கலாம்? என்ற அடிப்படையில் பாளையங்கோட்டை டக்கரம்மாள்புரம் சோதனைச்சாவடி, நாங்குநேரி டோல்கேட் பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தினர்.

இந்த நிலையில் களியக்காவிளை போலீசார் குற்றவாளிகளின் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளனர். மேலும், கொலையாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்டவர்கள் விவரங்களையும் சேகரித்து, அவர்களையும் தேடி வருகின்றனர். இதில் நெல்லையை சேர்ந்த ஒரு வாலிபருக்கும் தொடர்பு இருக்கலாம் என்று போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதையடுத்து களியக்காவிளை தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் நள்ளிரவு நெல்லைக்கு வந்தனர். பின்னர் நேற்று அதிகாலை 4 மணியளவில் நெல்லை பேட்டையில் உள்ள ரகுமான்பேட்டை 4-வது தெருவுக்குள் திடீரென்று சென்றனர். அவர்களுடன் சிறப்பு புலனாய்வு பிரிவு அதிகாரிகள், கியூ பிரிவு போலீசார், பேட்டை போலீசாரும் சென்றனர்.

பின்னர் அங்குள்ள அல்கபீர் என்பவரது வீட்டில் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினர். அல்கபீர் அந்த வீட்டில் உள்ளாரா? என்று தேடினர். ஆனால், அங்கு அவர் இல்லை.

இதையடுத்து வீட்டில் இருந்த அவரது தந்தை சாகுல் அமீது மற்றும் குடும்பத்தினரிடம் போலீசார் துருவி, துருவி விசாரணை நடத்தினர். அப்போது அல்கபீர் கடந்த 5 நாட்களாக வீட்டுக்கு வரவில்லை என்றும், அவரது செல்போனை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் அவர்கள் பதில் அளித்தனர்.

இதையடுத்து அல்கபீர் வீடு முழுவதும் போலீசார் சோதனை நடத்தினர். அதிகாலை 4 மணி முதல் 6 மணி வரை இந்த சோதனை நடைபெற்றது. ஆனால், சந்தேகப்படும் படியான பொருட்கள் எதுவும் சிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

28 வயது நிரம்பிய அல்கபீர் தென்காசியை பூர்வீகமாக கொண்டவர். இவர் நெல்லை பேட்டை ரகுமான்பேட்டை 4-வது தெருவில் வசித்து வருகிறார். நெல்லை வழுக்கோடை பகுதியில் தன்னுடைய தம்பி நடத்தி வரும் மொபட், மோட்டார் சைக்கிள்களுக்கு சீட் கவர் தைக்கும் கடையில் வேலை செய்து வந்தார்.

இதற்கிடையே, பெங்களூருவில் 3 நாட்களுக்கு முன்பு தீவிரவாதிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட 3 பேர் பிடிபட்டனர். அந்த சம்பவத்திலும் அல்கபீருக்கு தொடர்பு உண்டா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சப்-இன்ஸ்பெக்டர் கொலை தொடர்பாக போலீசார் நடத்திய இந்த அதிரடி சோதனை நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்