மாவட்ட செய்திகள்

கோடையிலும் தண்ணீர் நிரம்பி வழியும் சிக்கராயபுரம் கல்குவாரி

கடந்த ஆண்டு பெய்த மழைநீரை சேமித்து வைத்ததால் கோடையிலும் சிக்கராயபுரம் கல்குவாரியில் தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது. இதனை சுற்றுலா தலமாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினத்தந்தி

பூந்தமல்லி,

சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகள் கடந்த ஆண்டு அதிகளவில் வறண்டு போனது. இதனால் மாங்காடு அடுத்த சிக்கராயபுரத்தில் உள்ள கல்குவாரியில் இருந்து குழாய் மூலம் தண்ணீரை செம்பரம்பாக்கம் ஏரி அருகே உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு கொண்டு வந்து சென்னை மக்களுக்கு தமிழக அரசு குடிநீர் வினியோகம் செய்தது. இதன் காரணமாக கல்குவாரியில் நீர் குறைந்தது.

இந்நிலையில் கடந்த ஆண்டு இறுதியில் பெய்த பருவமழையால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகள் வேகமாக நிரம்பின. இதனிடையே செம்பரம்பாக்கம் ஏரி மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து வெளியேறிய உபரிநீர் சிக்கராயபுரம் கல்குவாரிக்கு செல்லும் வகையில் கால்வாய்கள் அமைக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஏற்பாடு செய்தனர். இதையடுத்து கோடையிலும் சிக்கராயபுரம் கல்குவாரி தண்ணீர் நிரம்பி கடல் போல் காட்சி அளிக்கிறது. குன்றத்தூர், மாங்காடு, சிக்கராயபுரம், பூந்தமல்லி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து இளைஞர்கள் உள்பட ஏராளமானோர் தினந்தோறும் இங்கு வந்து குளித்துவிட்டு செல்கின்றனர். இதுகுறித்து கல்குவாரியில் குளிக்க வரும் இப்பகுதி இளைஞர்கள் கூறியதாவது.

கல்குவாரியில் பெரும்பாலும் உள்ளூர் மக்களே ஆர்வமுடன் குளிக்க வருகின்றனர். ஏனென்றால் எங்கு பள்ளம், பாறை உள்ளது என்பது எங்களுக்கு அதிகம் தெரியும். பெரும்பாலும் நீச்சல் தெரிந்தவர்கள் மட்டுமே இங்கு குளிக்கின்றனர்.

தற்போது நீர் நிரம்பி இருப்பதால் கோடையை சமாளிக்க இங்கு அதிக அளவில் குளிக்க வருகிறோம். நீச்சல் குளங்களுக்கு குளிக்க 1 மணி நேரத்துக்கு குறிப்பிட்ட தொகை கொடுக்க வேண்டும். அதில் வேதிபொருட்கள் கலந்திருக்கும்.

சுற்றுலா தலம்

ஆனால் இங்கு குளிக்க எவ்வித கட்டணமும் கொடுக்க வேண்டியது இல்லை. எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் குளிக்கலாம். இயற்கையான தண்ணீர் உள்ளது. இங்கு குளிப்பது சற்று ஆபத்து என்றாலும் பாதுகாப்போடு நண்பர்களுடன் குளிப்பதால் மகிழ்ச்சி ஏற்படுகிறது.

கல்குவாரிக்கு இடையே உள்ள சில பாறைகளை உடைத்து அனைத்து குட்டைகளையும் ஒன்றாக்கி சுற்றுலா தலம் போல் படகு சவாரி விடலாம். இதனால் அரசுக்கு வருவாய் கிடைப்பதுடன், இந்த பகுதி சுற்றுலா தலமாகவும் மாறும்இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதேபோல் அனைத்து நீர்பிடிப்பு பகுதிகளையும் தூர்வாரி நீரை சேமிக்க வழிவகை செய்தால் தண்ணீர் பிரச்சினை வராது என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்