நாகர்கோவில்,
மத்திய அரசு நிறைவேற்றி இருக்கும் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராட்டங்கள் நடத்துபவர்களை கண்டித்து பா.ஜனதாவினரும் போராட்டங்களை நடத்தினர்.
இதைத் தொடர்ந்து குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக கோலம் போட்டு புதுவித போராட்டத்தை எதிர்ப்பாளர்கள் தொடங்கினர். இந்த நிலையில் பா.ஜனதாவினரும் குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பாளர்கள் பாணியிலேயே குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாக கோலம் போட்டு வருகின்றனர். இவ்வாறு கோலம் போட்டு ஆதரவு தெரிவிக்கும் நிகழ்ச்சி நாகர்கோவில் வெள்ளாடிச்சிவிளையில் நேற்று நடந்தது.
பரபரப்பு
அங்கு பா.ஜனதா மாவட்ட துணை தலைவர் முத்துராமன் வீடு உள்பட அனைத்து பா.ஜனதாவினர் வீடுகளின் முன்பும் பெண்கள் வண்ண வண்ண கோலங்களை வரைந்தனர். பின்னர் கோலத்தின் அருகே குடியுரிமை திருத்த சட்டத்தை வரவேற்கிறோம் என்று எழுதியிருந்தனர்.
நாகர்கோவிலில் நேற்று முன்தினம் தி.மு.க.வினர் கோலம் போட்டு குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கு போட்டியாக பா.ஜனதாவினர். கோலம் போட்டு ஆதரவு தெரிவித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.