சென்னை புளியந்தோப்பு பகுதியில் வசித்து வருபவர் தடா ரஹீம். இவர் இந்திய தேசிய லீக் கட்சியின் மாநில தலைவராக இருந்து வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு குறிப்பிட்ட மதம் மற்றும் சாதி குறித்து சர்ச்சையான கருத்தை முகநூல் பக்கத்தில் பதிவிட்டதாக கூறப்படுகிறது. இந்த பதிவுகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இந்நிலையில் தமிழ்நாடு பிராமணர் சங்கம் சார்பிலும், இந்து முன்னணி சார்பிலும் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.
புகாரின் பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு, தடா ரஹீம் மீது கலவரத்தை தூண்டும் வகையில் செயல்படுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மத்திய குற்றப்பிரிவு தனிப்படை போலீசார் பேசின் பிரிட்ஜ் ரெயில் நிலையம் அருகில் தடா ரஹீமை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.