மாவட்ட செய்திகள்

சிகிச்சையின் போது இளம்பெண் மயக்கம்: தனியார் ஆஸ்பத்திரிக்கு ‘சீல்’ வைப்பு போலி டாக்டருக்கு போலீசார் வலைவீச்சு

தேன்கனிக்கோட்டை அருகே சிகிச்சையின் போது இளம்பெண் மயங்கி விழுந்த சம்பவம் தொடர்பாக தனியார் ஆஸ்பத்திரிக்கு மருத்துவ குழுவினர் ‘சீல்‘ வைத்தனர். மேலும் தலைமறைவான போலி டாக்டரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

தினத்தந்தி

தேன்கனிக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள உரிகம் கிராமத்தை சேர்ந்தவர் மாதையன். இவருடைய மகள் மஞ்சுளா(வயது 20). இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனால் பெற்றோர் அவரை கோட்டையூர் கிராமத்தில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு டாக்டர் ஊசி போட்ட சிறிது நேரத்தில் மஞ்சுளாவுக்கு வாந்தி, மயக்கம் மற்றும் வலிப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.

இதையடுத்து டாக்டர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதனால் இளம்பெண்ணை பெற்றோர் தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அப்போது அவருக்கு சிகிச்சை அளித்தவர் போலி டாக்டர் என்பது தெரியவந்தது. இளம் பெண்ணுக்கு தவறாக சிகிச்சை அளித்த அந்த ஆஸ்பத்திரியை கண்காணிக்குமாறு மாவட்ட இணை இயக்குனர் அசோக்குமார் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அதன்பேரில் தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரி தலைமை டாக்டர் ஞானமீனாட்சி, உரிகம் அரசு ஆஸ்பத்திரி ராஜேந்திரன், அஞ்செட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமணன், வருவாய்த்துறை அலுவலர்கள், சுகாதாரத்துறை அலுவலர்கள் கொண்ட மருத்துவ குழுவினர் கோட்டையூருக்கு சென்றனர். அப்போது இளம்பெண்ணுக்கு சிகிச்சை அளித்த டாக்டர் மாயமாகி விட்டது தெரியவந்தது.

இதையடுத்து டாக்டர்கள் குழுவினர் மற்றும் போலீசார் ஆஸ்பத்திரியில் சோதனை நடத்தினர். அப்போது அனுமதி பெறாத ஆங்கில மருந்துகள், காலி மருந்து பாட்டில்கள், ஊசிகள் இருப்பதும், அதில் பெரும்பாலானவைகள் காலாவதியானவைகள் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து மருத்துவ குழுவினர் அந்த மருந்துகளை பறிமுதல் செய்தனர்.

பின்னர் வருவாய்த்துறை மற்றும் போலீசார் முன்னிலையில் டாக்டர்கள் குழுவினர் அந்த மருத்துவமனைக்கு சீல் வைத்தனர். இதுதொடர்பான புகாரின் பேரில் அஞ்செட்டி போலீசார் தலைமறைவான போலி டாக்டரை வலைவீசி தேடி வருகின்றனர். தனியார் ஆஸ்பத்திரிக்கு சீல் வைக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்