வேடசந்தூர்:
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள வெள்ளனம்பட்டியில் தனியார் நூற்பாலை செயல்பட்டு வருகிறது. இந்த நூற்பாலையில் நேற்று மாலை வழக்கம்போல் தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது ஆலையில் ஒருபகுதியில் கொட்டப்பட்டிருந்த பஞ்சுகளில் தீப்பிடித்தது. அந்த தீ மேலும் பரவி எந்திரங்களிலும் பிடித்தது. இதனால் நூற்பாலையில் இருந்து கரும்புகை வெளியேறியது. உடனே அங்கு வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடி வந்தனர்.
பின்னர் இதுகுறித்து உடனடியாக வேடசந்தூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் ஜேம்ஸ் அருள்பிரகாஷ் தலைமையிலான தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, நூற்பாலையில் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்க முயன்றனர். ஆனால் அவர்களால் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் திண்டுக்கலில் இருந்து தீயணைப்பு படையினர் வரவழைக்கப்பட்டனர். பின்னர் 2 படையினரும் இணைந்து சுமார் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீவிபத்தில் நூற்பாலையில் இருந்த எந்திரங்கள் மற்றும் பஞ்சு மூட்டைகள் எரிந்து நாசமானது. இதுகுறித்து வேடசந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்