கூலி தொழிலாளி
நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே பாப்பாக்குடியை அடுத்த ரங்கசமுத்திரம் நத்தம் காலனியைச் சேர்ந்தவர் பாடாலிங்கம். இவருடைய மகன் இசக்கிராஜா (வயது 24). கூலி தொழிலாளி.
அப்பகுதியில் உள்ள முப்பிடாதி அம்மன் கோவிலில் நேற்று முன்தினம் இரவில் கார்த்திகை மாத சூறை விடும் திருவிழா நடைபெற்றது. அப்போது இசக்கிராஜா, அவருடைய நண்பர்களான அப்பகுதியைச் சேர்ந்த சங்கரநாராயணன் (25) மற்றும் 17 வயதான வாலிபர் ஆகிய 3 பேரும் மது போதையில் கோவிலுக்கு சென்று தகராறில் ஈடுபட்டனர்.
அரிவாள் வெட்டு
இதனை ஊர் தலைவரான பாபநாசம் (65) கண்டித்தார். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த இசக்கிராஜா தனது சட்டைக்குள் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து திடீரென்று பாபநாசத்தை சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் அலறினர். உடனே அங்கிருந்த மாரியப்பன், அவருடைய மகன் ஜெயகணேசன் (25) ஆகிய 2 பேரும் சேர்ந்து இசக்கிராஜாவை தடுக்க முயன்றனர். இதில் ஜெயகணேசனின் கையிலும் அரிவாள் வெட்டு விழுந்தது. எனினும் மாரியப்பன், ஜெயகணேசன் ஆகிய 2 பேரும் சேர்ந்து இசக்கிராஜாவிடம் இருந்த அரிவாளை பிடுங்கினர். பின்னர் அதே அரிவாளால் இசக்கிராஜாவை சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. பலத்த வெட்டுக்காயம் அடைந்த இசக்கிராஜா, பாபநாசம் ஆகிய 2 பேரும் உயிருக்கு போராடியவாறு கிடந்தனர்.
சாவு
கோவில் விழாவில் ஊர் தலைவர் உள்ளிட்ட 3 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்ததால் பெரும் பரபரப்பு நிலவியது. உடனே அம்பை துணை போலீஸ் சூப்பிரண்டு பிரான்சிஸ், இன்ஸ்பெக்டர் விஜயகுமார், பாப்பாக்குடி சப்-இன்ஸ்பெக்டர் ஆழ்வார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
அரிவாள் வெட்டில் படுகாயம் அடைந்த இசக்கிராஜா, பாபநாசம், ஜெயகணேசன் ஆகிய 3 பேரையும் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி இசக்கிராஜா நேற்று அதிகாலையில் பரிதாபமாக உயிரிழந்தார். பாபநாசம், ஜெயகணேசனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
பலத்த பாதுகாப்பு
இதுகுறித்து பாப்பாக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவில் விழாவில் ஏற்பட்ட கோஷ்டி மோதலில் வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்டதும், ஊர் தலைவர் உள்ளிட்ட 2 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்ததும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.
இதையடுத்து அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.