மாவட்ட செய்திகள்

காதல் விவகாரத்தில் பயங்கரம்: வாலிபர், துப்பாக்கியால் சுட்டு கொலை - காதலியின் சித்தப்பா வெறிச்செயல்

ஹாசன் அருகே, காதல் விவகாரத்தில் ஜாமீனில் வந்த வாலிபர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட காதலியின் சித்தப்பாவை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

தினத்தந்தி

ஹாசன்,

ஹாசன் மாவட்டம் ஆலூர் தாலுகா சுவப்பினஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மது(வயது 28). இதுபோல அதே கிராமத்தில் வசித்து வருபவர் 17 வயது மைனர் பெண். இந்த நிலையில் மதுவுக்கும், அந்த மைனர் பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியது. அவர்கள் 2 பேரும் பல்வேறு இடங்களுக்கு சென்று தங்களது காதலை வளர்த்து வந்தனர். இவர்களின் காதல் விவகாரம், மைனர் பெண்ணின் பெற்றோருக்கு தெரியவந்தது. ஆனால் மது வேறு சாதியை சேர்ந்தவர் என்பதால், மைனர் பெண்ணின் பெற்றோர் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த நிலையில் கடந்த ஆண்டு(2019) மைனர் பெண்ணை, மது வெளியூருக்கு கடத்தி சென்று இருந்தார். மேலும் அங்கு வைத்து மைனர் பெண்ணை அவர் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே தங்களது மகளை மது கடத்தி சென்று விட்டதாக, மைனர் பெண்ணின் பெற்றோர் ஆலூர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மதுவை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் மைனர் பெண்ணை மீட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மது, ஜாமீனில் ஜெயிலில் இருந்து வெளியே வந்து இருந்தார். இதையடுத்து அவர் தனது காதலியான மைனர் பெண்ணின் வீட்டிற்கு சென்று, உங்கள் மகளை எனக்கு திருமணம் செய்து கொடுங்கள் என்று மைனர் பெண்ணின் பெற்றோரிடம் கேட்டு உள்ளார். ஆனால் அவர்கள் திருமணம் செய்து கொடுக்க மறுத்து விட்டனர். ஆனாலும் மைனர் பெண்ணை, தனக்கு திருமணம் செய்து கொடுக்கும்படி மது தொடர்ந்து வற்புறுத்தி வந்து உள்ளார்.

இந்த நிலையில் நேற்று மதியம் காதலியின் வீட்டின் அருகே மது மோட்டார் சைக்கிளில் சென்று இருந்தார். இந்த சந்தர்ப்பத்தில் அங்கு வந்த மைனர் பெண்ணின் சித்தப்பாவான ரூபேஷ் என்பவர், மதுவை கண்டித்து உள்ளார். இதனால் அவர்கள் இடையே வாக்குவாதம் உண்டானது. இந்த சந்தர்ப்பத்தில் திடீரென வீட்டிற்குள் சென்ற ரூபேஷ், துப்பாக்கியை எடுத்து வந்து மதுவை சுட்டார்.

இதில் மார்பில் குண்டு துளைத்ததில் மது சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த ரூபேஷ் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். மது இறந்து கிடப்பது பற்றி அறிந்ததும் அவரது பெற்றோரும், உறவினர்களும் சம்பவ இடத்தில் கூடி, மதுவின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

இந்த கொலை சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஆலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மதுவின் உடலை பார்வையிட்டனர். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஆலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் காதலியை திருமணம் செய்து வைக்க மது வற்புறுத்தி வந்ததால், ஆத்திரத்தில் இருந்த காதலியின் சித்தப்பா ரூபேஷ், மதுவை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்தது தெரிந்தது. இந்த கொலை சம்பவம் குறித்து ஆலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள ரூபேசை வலைவீசி தேடிவருகின்றனர். மேலும் அசம்பாவித சம்பவங்களை தடுக்க சுவப்பினஹள்ளி கிராமத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு உள்ளது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு