பெரம்பலூர்,
பெரம்பலூர் அருகே எளம்பலூரில் பிரம்மரிஷி மலை அடிவாரத்தில் உள்ள செல்வ மகா வெற்றி கணபதி மற்றும் காகன்னை ஈஸ்வரர் கோவிலில் உலக மக்கள் நலன் கருதியும், ஜீவகாருண்ய சிந்தனை ஓங்கிடவும், பருவமழை தவறாமல் பெய்து தனதானியம் பெருகிட வேண்டியும் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதத்தில் தொடங்கி புரட்டாசி மாதம் வரை 51 நாட்களுக்கு தொடர்ந்து கோ- பூஜை நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான தொடர் கோ-பூஜை நேற்று தொடங்கியது. இதனை முன்னிட்டு முதல் 3 நாட்கள் பதிவிரதை ஸ்ரீமண்டோதரி பூஜை, 108 லட்சுமி பூஜை மற்றும் 210 சித்தர்கள் தொடர் யாகம் நடக்கிறது. இதனை தொடர்ந்து வருகிற அக்டோபர் மாதம் 15-ந்தேதி வரை தொடர் கோ-பூஜை பிரம்மரிஷி மலைஅடிவாரத்தில் நடக்கிறது. கோ-பூஜையை சிங்கப்பூர் தொழில் அதிபர் ரத்தினவேலு முன்னிலையில், அன்னை சித்தர் ராஜ்குமார் சுவாமி தொடங்கி வைத்தார். இதில் ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி வள்ளிநாயகம், தமிழ் வளர்ச்சி பண்பாடு மற்றும் இந்துசமய அறநிலைய ஆட்சித்துறை முன்னாள் அரசு செயலாளர் ராமைய்யா, வக்கீல் சீனிவாசமூர்த்தி, தேனூர் தமிழ்ச்செல்வன், சிறப்பு மருத்துவ நிபுணர்கள் டாக்டர் ராஜாசிதம்பரம் மற்றும் சிங்கப்பூர், இலங்கை, மலேசியா குருகடாட்சம் மெய்யன்பர்கள், பிரம்மரிஷி சாதுமடம் பொறுப்பாளர்கள் மற்றும் மகாலிங்கசுவாமி மடம் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ரோகிணி ராஜ்குமார், இளம் தவயோகியர் சுந்தரமகாலிங்கம் மற்றும் குருகடாட்சம் மெய்யன்பர்கள் செய்திருந்தனர்.