அணைக்கட்டு,
பள்ளிகொண்டா அருகே செங்கல் சூளை அதிபர் சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக தப்பி ஓடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டாவை அடுத்து மேல்வெட்டுவாணம் கிராமத்தை சேர்ந்தவர் காசிநாதன் (வயது 60), செங்கல் சூளை நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று பகல் 12 மணியளவில் கோவிந்தம்பாடி சாலையில் உள்ள தனது நிலத்திற்கு அவர் மோட்டார்சைக்கிளில் சென்று உள்ளார். அப்போது அங்கு வேலை செய்து கொண்டிருந்த ஒதியத்தூரை சேர்ந்த பெருமாள் (72) என்பவரிடம் நிலத்தில் விழுந்த தேங்காயை எடுத்துக்கொண்டு மாடுகளுக்கு தீவனப்பயிர்களை அறுத்துவரும்படி கூறினார்.
பெருமாள் சென்றபின்னர் அங்குள்ள பம்புசெட் அறையில் காசிநாதன் நாளிதழ்களை படித்துக்கொண்டிருந்தார். இந்த நிலையில் பெருமாள், தேங்காயை எடுத்துக்கொண்டு காசிநாதன் இருந்த பம்புசெட் அறைக்கு மதியம் 12.45 மணிக்கு வந்தார். அப்போது காசிநாதன், ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து அலறினார். இது குறித்து காசிநாதனின் மனைவி செல்வத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு வந்து கணவரின் உடலை பார்த்து செல்வம் கதறி அழுதார். மகன் சீனிவாசனும் அங்கு வந்து தந்தை காசிநாதனின் உடலை பார்த்து விட்டு பள்ளிகொண்டா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில் பள்ளிகொண்டா சப்-இன்ஸ்பெக்டர்கள் இன்பகுமார், ஜெயமூர்த்தி, கலைசெல்வன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காசிநாதனின் உடலை கைப்பற்றி விசாரணை செய்தனர். சம்பவ இடத்துக்கு ஆம்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலசந்திரன் மற்றும் வேப்பங்குப்பம் இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோர் வந்து பார்வையிட்டனர். அவர்கள் நடத்திய விசாரணையில் பம்புசெட் அறையில் காசிநாதன் தனியாக இருந்தபோது மர்மநபர்கள் அவரை கழுத்து மற்றும் முகத்தில் கத்தியால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்து விட்டு தப்பியது தெரியவந்தது.
இந்த நிலையில் கைரேகை நிபுணர் விஜய் சம்பவ இடத்திற்கு வந்து கொலையாளிகளின் கைரேகைகளை பதிவு செய்தார். மேலும் மோப்பநாய் சிம்பா வரவழைக்கப்பட்டது. கொலைநடந்த அறையிலிருந்து மேல் வெட்டுவாணம் பஸ் நிறுத்தம் வரை கிலோ மீட்டர் தூரம் ஓடிச்சென்று அங்கு சுற்றி சுற்றி வந்து நின்றது. இந்த நிலையில் காசிநாதனின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து ஆம்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலசந்திரன் கூறுகையில், கொலையுண்ட காசிநாதனின் செல்போனை கொலையாளிகள் எடுத்து சென்றுள்ளனர். என்ன காரணத்திற்காக அவரை கொலை செய்தார்கள் என்ற விவரம் தெரியவில்லை. விரைவில் கொலையாளிகளை கண்டுபிடித்துவிடுவோம் என்றார்.
கொலை செய்யப்பட்ட காசிநாதனுக்கு சீனிவாசனை தவிர கதிர்வேல், முகில்வாணன் என்ற மகன்கள் உள்ளனர். மகள் ஜெயந்தி திருமணமாகி வேலூரில் கணவருடன் வசித்து வருகிறார். பட்டப்பகலில் பம்புசெட் அறையில் இருந்த செங்கல் சூளை அதிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.