பூந்தமல்லி,
சென்னை நெற்குன்றம், சண்முகா நகர், சத்தியம் தெருவில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. நேற்று அதிகாலை இந்த அடுக்குமாடி குடியிருப்பின் தரைதளத்தில் நிறுத்தி இருந்த வாகனங்கள் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த குடியிருப்புவாசிகள் மற்றும் அக்கம் பக்கத்தினர் வாகனங்களில் எரிந்த தீயை அணைக்க முயன்றனர். ஆனால் வாகனங்களில் தீ கொழுந்து விட்டு எரிந்ததால் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த கோயம்பேடு தீயணைப்பு நிலைய வீரர்கள், வாகனங்களில் எரிந்த தீயை அணைத்தனர். எனினும் ஒரு கார் மற்றும் 3 மோட்டார் சைக்கிள்கள் என 4 வாகனங்கள் தீயில் எரிந்து நாசமாயின. இதுகுறித்து கோயம்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து மின்கசிவு காரணமாக வாகனங்கள் தீப்பிடித்து எரிந்ததா? அல்லது மர்மநபர்கள் யாராவது வாகனங்களுக்கு தீவைத்தனரா? என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.