தாம்பரம்,
சென்னையை அடுத்த நங்கநல்லூர் இளங்கோவடிகள் தெருவை சேர்ந்தவர் ஹாலன்(வயது 22). இவர், நேற்று காலை தனது காரில் தாம்பரம் வந்துவிட்டு வீட்டுக்கு திரும்பி சென்று கொண்டிருந்தார். பல்லாவரம் அரைவா சிக்னல் அருகே சென்றபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் தறிகெட்டு ஓடியது. இதை பார்த்து ஜி.எஸ்.டி. சாலையில் சென்ற பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் அதிர்ச்சி அடைந்தனர். தறிகெட்டு ஓடிய கார், சாலையோரம் நின்றிருந்த சரக்கு வாகனம், ஆட்டோ, இருசக்கர வாகனம் என அடுத்தடுத்து 6 வாகனங்கள் மீது மோதி நின்றது. இதில் அந்த வாகனங்கள் சேதமடைந்தன. ஹாலன் உள்பட 4 பேருக்கு காயம் ஏற்பட்டது. அனைவரும் குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.
இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்தில் சிக்கிய வாகனங்களை போலீசார் அப்புறப்படுத்தினர். இதுபற்றி குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.