கோவை,
உணவு பாதுகாப்பு துறையின் சார்பில் உணவு பாதுகாப்புத்துறை ஆணையாளரும், அரசு முதன்மை செயலாளருமான அமுதா தலைமையில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த ஆலோசனை கூட்டம் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்தில் ஓட்டல் உரிமையாளர்கள், மளிகைக்கடை உரிமையாளர்கள், உணவு வணிக சங்கங்கள், குடிநீர் பாட்டில் உற்பத்தியாளர்கள், பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள், நடைபாதை கடை உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில், உணவு பாதுகாப்புத்துறை ஆணையாளரும், முதன்மை செயலாளருமான அமுதா கூறியதாவது:-
தமிழகத்தில் சுற்றுச்சூழலை மேம்படுத்தவும், இயற்கை சமநிலை பாதுகாக்கும் நோக்கிலும், தமிழகத்தில் வருகிற ஜனவரி 1-ந் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்படும் என்று தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதன்படி, அனைத்து மாவட்டங்களிலும் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகள் படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிற டிசம்பர் மாதத்துக்குள் முற்றிலும் தடை செய்யப்பட உள்ளது. கோவை மாவட்டத்தில் பிளாஸ்டிக் உபயோகத்தை தடுக்க மாவட்ட கலெக்டர் தலைமையில் வழிகாட்டுதல் குழு அமைக்கப்பட்டு உள்ளது. தற்போது பயன்பாட்டில் இருக்கும் பிளாஸ்டிக்கிற்கு மாற்று பொருட்களை பயன்படுத்தி உணவு வணிகத்தை சிறப்பாக செய்து இயற்கை வளத்தை காக்க வேண்டும்.