சேலம்,
சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில், மாவட்டம் முழுவதிலும் இருந்து ஏராளமான பொதுமக்கள் வந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை கலெக்டர் ராமனிடம் வழங்கினர். கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, வீட்டுமனை பட்டா, சாதிச்சான்று, வேலைவாய்ப்பு, வங்கி கடனுதவி, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, உதவி உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 365 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டன. இதையடுத்து அந்த மனுக்கள் மீது விசாரணை நடத்தி உரிய தீர்வு காணுமாறு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
பெண் குழந்தைகளுக்கு
இதனை தொடர்ந்து மாவட்ட சமூக நலத்துறையின் மூலம் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் சுபசக்தி, கோகிலா, கவுசிகா, சூரியபிரியா, பூர்ணிமாதேவி மற்றும் காயத்ரி என 6 பெண் குழந்தைகளுக்கு தலா ரூ.15 ஆயிரத்து 200 வைப்புத்தொகையும், அந்த பெண் குழந்தைகளுக்கு 18 வயது நிறைவடையும் காலத்தில் வைப்புத்தொகையின் முதிர்வு தொகை ரூ.2 லட்சத்து 80 ஆயிரத்து 810-க்கு பாதுகாப்பு உதவித்தொகைக்கான காசோலையினையும் மாவட்ட கலெக்டர் ராமன் வழங்கினார்.
இந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் சப்-கலெக்டர் பாஸ்கரன் (சமூக பாதுகாப்புத் திட்டம்), மாவட்ட வழங்கல் அலுவலர் தியாகராஜன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஸ்ரீநாத், திட்ட அலுவலர் (பழங்குடியினர் நலன்) சுகந்தி பரிமளம், மாவட்ட சமூக நல அலுவலர் கார்த்திகா உள்பட பலர் கலந்து கொண்டனர்.