மயிலாடுதுறை,
நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் உள்ள அரசு மருத்துவமனையில் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர்.ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர், மருத்துவமனையில் உள்ள பிரசவ கால அவசர சிகிச்சை பிரிவு, குழந்தைகள் நல பிரிவு, பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவு, உள்நோயாளிகள் பிரிவு, டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெறும் பிரிவு உள்ளிட்டவைகளை பார்வையிட்டார். பின்னர் அங்கு சிசிச்சை பெற்று வரும் நோயாளிகளிடம் மருத்துவமனையில் அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார். இதனை தொடர்ந்து மகப்பேறு சிகிச்சை பிரிவில் குழந்தை பெற்ற 3 பெண்களுக்கு 16 பொருட்கள் அடங்கிய அம்மா குழந்தைகள் நல பரிசு பெட்டகத்தை வழங்கினார். பின்னர் சுகாதாரத்துறை செயலாளர், நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் மழைக்கால நோய் பரவும் அபாயத்தை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன்படி அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் நோய் தடுப்பு மருந்துகள் போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள், காய்ச்சல் ஏற்பட்டால் உடனே அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும். டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் புதிதாக 1,316 டாக்டர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் கூடுதலாக 200 படுக்கை வசதிகள் கொண்ட தாய்-சேய் நல பிரிவு கட்டிடம் கட்ட ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணி விரைவில் தொடங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
இதனை தொடர்ந்து சுகாதாரத்துறை செயலாளரிடம், அங்கு இருந்த பொதுமக்களும், சிகிச்சை பெறும் நோயாளிகளும் மருத்துவமனையில் குடிநீர் வசதி இல்லை என்று புகார் செய்தனர். உடனே சுகாதாரத்துறை செயலாளர், மருத்துவமனை வளாகத்தில் போர்வெல் அமைத்து குடிநீர் வசதி செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுப்பணித் துறையினருக்கு உத்தரவிட்டார்.
ஆய்வின்போது, மயிலாடுதுறை உதவி கலெக்டர் பிரியங்கா, நாகை மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் குருநாதன், துணை இயக்குனர் (குடும்ப நலம்) மகேந்திரன், மயிலாடுதுறை அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரி (பொறுப்பு) சிவகுமார் ஆகியோர் உடன் இருந்தனர்.