கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட வன அலுவலர் தீபக் பில்கி உத்தரவின் பேரில், கிருஷ்ணகிரி வனச்சரக அலுவலர் நாகேஷ் தலைமையில் வனவர்கள் ராஜேந்திரன், சம்பத்குமார், வன காப்பாளர்கள் கங்கை அமரன், சிவக்குமார், நாராயணன், கோவிந்தசாமி கொண்ட குழுவினர் கிருஷ்ணகிரி - ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் பந்தாரப்பள்ளி அருகில் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக மோட்டார்சைக்கிளில் ஆண் ஒருவரும், பெண் ஒருவரும் வந்தனர். அவர்களை வனத்துறையினர் நிறுத்தி சோதனை செய்தனர். அதில் அவர்களிடம் 8 முயல்களும், 25 கவுதாரிகளும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
விசாரணையில், அவர்கள் ஊத்தங்கரை அருகே உள்ள வெள்ளிமலை கிராமத்தை சேர்ந்த காவேரி (வயது 44), அவரது மனைவி முத்தம்மா என்பதும், முயல்கள், கவுதாரிகளை வனப்பகுதியில் வேட்டையாடி அதிக விலைக்கு விற்பதற்காக சிக்காரிமேட்டிற்கு கொண்டு சென்றதும் தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து முயல்கள் மற்றும் கவுதாரிகளை வேட்டையாடியதாக கணவன், மனைவி 2 பேரையும் கைது செய்த வனத்துறையினர், அவர்களை கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இதில் தொடர்புடைய மேலும் சிலரை வனத்துறையினர் தேடி வருகிறார்கள்.
இது குறித்து மாவட்ட வன அலுவலர் தீபக் பில்கி கூறியதாவது:- வன உயிரினங்கள் வேட்டையாடப்படுவது குற்றமாகும். வன உயிரின பாதுகாப்பு சட்டம் 1972-ன் கீழ் இது தண்டிக்கப்பட வேண்டிய குற்றமாகும். எனவே, வனவிலங்குகளை வேட்டையாடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.