தொண்டி,
திருவாடானை தாலுகாவில் காவல் துறை சார்பில் சாலை பாதுகாப்பு வாரத்தையொட்டி சாலை பாதுகாப்பை வலியுறுத்தி பல்வேறு வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதனையொட்டி தொண்டி, திருவாடானை, எஸ்.பி.பட்டினம், திருப்பாலைக்குடி, ஆர்.எஸ்.மங்கலம் போலீஸ் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின்பேரில் திருவாடானை போலீஸ் துணை சூப்பிரண்டு விஜய்குமார் தலைமையில் தலைகவசம் அணிந்து பேரணி, இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் ஸ்டிக்கர்கள் ஒட்டுதல், பள்ளி, கல்லூரிகளில் மாணவ, மாணவிகள் இடையே சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டங்கள் உள்ளிட்டவை நடைபெற்றன.
திருவாடானை அருகே உள்ள சி.கே.மங்கலத்தில் மதுரை-தொண்டி, திருச்சி- ராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலைகளில் திருவாடானை போலீஸ் துணை சூப்பிரண்டு விஜய்குமார் தலைமையில் வாகனங்களுக்கு போலீசார் கருப்பு ஸ்டிக்கர்கள் ஒட்டி சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். அதனை தொடர்ந்து போலீஸ் துணை சூப்பிரண்டு விஜய்குமார் கூறியதாவது:- சாலை பாதுகாப்பு வாரத்தையொட்டி திருவாடானை போலீஸ் துணை சரகத்தில் சாலை பாதுகாப்பின் அவசியம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். சாலைகளில் பயணம் செய்யும்போது பொதுமக்கள் மிதமான வேகத்தில் பயணம் செய்ய வேண்டும். இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்யும்போது செல்போன் பேசியபடி செல்வதை தவிர்க்க வேண்டும்.
மேலும் இரு சக்கர வாகனங்களில் பயணம் செல்பவர்கள் தலைகவசம் கட்டாயம் அணிந்து கொள்ளவேண்டும், நான்கு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் சீட் பெல்ட் அணிந்து கொள்ள வேண்டும். குறிப்பாக மது அருந்தி விட்டு வாகனங்கள் ஓட்டுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். திருவாடானை, தொண்டி பகுதியில் சமீப காலமாக தொடர் திருட்டு சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இச் சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகளை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனா உத்தரவின் பேரில் திருவாடானை போலீஸ் துணை சூப்பிரண்டு மேற்பார்வையில் திருவாடானை போலீஸ் இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி, சப்-இன்ஸ்பெக்டர்கள் சிராஜுதீன், மாரிச்சாமி ஆகியோர் தலைமையில் 2 தனி போலீஸ் படை அமைக்கப்பட்டு இரவு, பகலாக தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.
இந்த குற்ற சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகள் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் அடையாளம் காணப்பட்டுஉள்ளனர். அதன் அடிப்படையில் தனிப்படை போலீசார் குற்றவாளிகளை நெருங்கி விட்டனர். விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள். சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பகுதியில் நடைபெற்றுள்ள திருட்டு சம்பவங்களில் தொடர்பு உடையவர்களே இப்பகுதியிலும் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டுஉள்ளது தெரியவந்துள்ளது. திருவாடானை காவல் துணை சரகத்தில் பழங்குற்றவாளிகள் போலீசாரின் தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.
திருவாடானை பகுதியில் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட ஒருவரும், மாடு திருட்டு சம்பவத்தில் ஒருவரையும் கைது செய்துள்ளோம். திருட்டு சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் திருட்டு சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை சுட்டுப்பிடிக்க உத்தரவு வந்துள்ளது. பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை தங்கள் பகுதிகளில் சந்தேகத்திற்குரிய நபர்கள் நடமாட்டம் இருந்தால் அது குறித்து உடனடியாக அருகில் உள்ள போலீஸ் நிலையங்களுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கவேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.