மதுரை மேற்கு சட்டசபை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக அமைச்சர் செல்லூர் ராஜூ போட்டியிடுகிறார். அவர் தொகுதி முழுவதும் மக்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். அவர் செல்லும் இடங்களில் எல்லாம் பெண்கள் ஆரத்தி எடுத்து மாலை அணிவித்து வரவேற்பு கொடுக்கின்றனர். மேலும் பொதுமக்கள் திரண்டு நின்று எங்கள் ஓட்டு உங்களுக்கே, இரட்டை இலைக்கே என்று உற்சாக ஆரவாரம் எழுப்புகின்றனர். நேற்று அமைச்சர் செல்லூர் ராஜூ சோலையழகுபுரத்தில் உள்ள முக்கிய நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
ஜெயலலிதா என்னை நம்பி அமைச்சர் பதவியை தந்தார். என்னுடைய கூட்டுறவு துறையில் சிறப்பாக பணியாற்றி இருக்கிறேன். 28 விருதுகள் பெற்று இருக்கிறேன். குடியரசு தலைவரிடம் 2 முறை பாராட்டும், விருதும் பெற்று இருக்கிறேன். என்னை பொறுத்தவரை சேவை தான் முக்கியம். ஒழுக்கமாக இருந்து இருக்கிறேன். தெர்மாகோல் நானாக கண்டுபிடித்தது கிடையாது. அதிகாரிகள் சொன்னதை செய்தேன். ஆனால் என்னை எதிர்கட்சிகள் கேலி கிண்டல் செய்கின்றனர். நான் இதையெல்லாம் பொருட்படுத்துவதில்லை. கடந்த 10 ஆண்டுகளில் அ.தி.மு.க. சொன்னதை எல்லாம் செய்தது. தடையில்லா மின்சாரம் தந்தோம். 100 யூனிட் இலவமாக வழங்குகிறோம். தமிழகம் அமைதி பூங்காகவாக இருக்கிறது. வளர்ச்சியை நோக்கி வீறுநடை போட்டு கொண்டு இருக்கிறது. இந்த நிலை தொடருவதற்கு பொதுமக்கள் அ.தி.மு.க.விற்கு ஆதரவளிக்க வேண்டும்.
மதுரைக்காக நான் பல திட்டங்களை கொண்டு வந்திருக்கிறேன். மதுரையின் வளர்ச்சியே எனது உயிர் மூச்சு. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பெரியார் பஸ் நிலையம் ரூ.159 கோடியில் சீரமைக்கப்பட்டு வருகிறது. மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றியுள்ள பகுதிகள் அனைத்தும் புனரமைக்கப்பட்டு அழகுப்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த கால வரலாற்றில் மதுரையில் ஒரே நேரத்தில் ரூ.100 கோடிக்கு வளர்ச்சி பணிகள் நடப்பதே பெரிய விஷயம். ஆனால் கடந்த 5 ஆண்டுகளில் மதுரையில் மட்டும் சுமார் ரூ.5 ஆயிரம் கோடிக்கு வளர்ச்சி பணிகள் நடந்து உள்ளது. இந்த பணிகள் கொரோனா காரணமாக தாமதமாகி விட்டது. இன்னும் ஒரு ஆண்டில் இந்த பணிகள் அனைத்தும் முடிந்து விடும். அதன்பின் மதுரை நகரம், உலக நகரங்களுக்கு இணையாக இருக்கும். உண்மையாக உழைத்து வருகிறேன். கடந்த 10 ஆண்டுகளாக இந்த தொகுதியில் உங்களோடு ஒருவனாக, உங்கள் வீட்டு பிள்ளையாக இருந்து வருகிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.