மாவட்ட செய்திகள்

காணாமல் போன மலை கிராமம் 82 ஆண்டுகளுக்குபின் கண்டுபிடிப்பு குடிசை அமைத்து மக்கள் மீண்டும் குடியேறினார்கள்

அரூர் அருகே காணாமல் போன மலை கிராமத்தை 82 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடித்த மலைவாழ் மக்கள் அங்கு குடிசை அமைத்து மீண்டும் குடியேறினார்கள்.

தினத்தந்தி

அரூர்,

தர்மபுரி மாவட்டம் அரூர் தாலுகா கோட்டப்பட்டி ஊராட்சியில் மலை கிராம பகுதியில், ஒருவருக்கு சொந்தமான விவசாய நிலம் சிட்லிங் -கோட்டப்பட்டி சாலை பகுதியில் உள்ளது. இந்த நிலத்தை மற்றொருவருக்கு 40 ஆண்டுகளுக்கு முன்பு குத்தகைக்கு விட்டதாக கூறப்படுகிறது. திடீரென நிலத்தை விற்பனை செய்யப்போவதாக உரிமையாளர் கூறியதாகவும், அதற்கு குத்தகை எடுத்தவர் நிலத்தை விற்பதாக இருந்தால் எனக்கு கொடுத்து விடுங்கள், நான் வாங்கி கொள்கிறேன் என்று கூறியதாகவும் தெரிகிறது.

இதற்கிடையே ஒருவர் 15 ஆண்டுகளுக்கு முன்பு சிட்லிங் பகுதியில் நிலம் வாங்கி குடியிருந்து வருகிறார். மேற்கண்ட குத்தகை நிலத்தை, குத்தகை எடுத்தவருக்கு தெரியாமல் அவர் வாங்கியதாக கூறப்படுகிறது. பின்னர் 40 ஆண்டுகள் பராமரித்து வந்தவரை வெளியேறுமாறு கூறினாராம்.

இதுதொடர்பாக நிலத்தை வாங்கியவருக்கும், ஏற்கனவே இருந்த நில உரிமையாளரிடம் குத்தகை எடுத்தவருக்கும் இடையே வாக்குவாதம், கைகலப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக போலீஸ் நிலையத்தில் குத்தகை எடுத்தவர் புகார் கொடுத்துள்ளார். அதற்கு போலீசார் அந்த நிலத்திற்கான ஆதாரம் ஏதேனும் இருக்கிறதா? என்று கேட்டுள்ளனர்.

இதுதொடர்பாக சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஈ.சி. (வில்லங்க சான்றிதழ்) எடுத்து பார்த்தபோது அந்த நிலம் 1937-ம் ஆண்டு அம்மாபேட்டை என்ற மலை கிராமமாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுதொடர்பாக மேலும் விசாரித்தபோது 1937-ம் ஆண்டில் சேலம் மாவட்டத்தில் இருந்த அரூர் தாலுகா கோட்டப்பட்டி - சிட்லிங் சாலையில் இடையில் அம்மாபேட்டை என்ற மலை கிராமம் இருந்ததும் அங்கு மலைவாழ் மக்கள் வீடு கட்டி குடியிருந்து வந்ததும் தெரியவந்தது.

அப்போது ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இந்தப்பகுதியில் இருந்த கிராம நிர்வாக அலுவலர் ஒருவர் அங்கு வாழ்ந்த மலைவாழ் மக்களை மிரட்டியோ அல்லது விஷக்காய்ச்சல் பரவுகிறது என்று பொய் சொல்லியோ வெளியேற்றி இருக்கலாம் என்றும், அதன் பின்னர் சுமார் 14 ஏக்கர் கொண்ட அந்த கிராமத்தை தன் பெயருக்கும், அவரது தம்பி பெயருக்கும் பட்டா மாற்றிக் கொண்டதாகவும், அதன்பிறகு மற்ற சிலருக்கு விற்பனை செய்யப்பட்டு அந்த நிலம் இறுதியாக ஒருவரிடம் வந்ததாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடயே 1937-ல் அந்த கிராமத்தில் இருந்து வெளியேறிய மலைவாழ் மக்கள் தாங்கள் வாழ்வதற்கு பல்வேறு இடங்களுக்கு சென்றுவிட்டனர். இந்தநிலையில் இந்த பகுதியை பூர்வீக வசிப்பிடமாக கொண்டவர்கள் முன்னோர்கள் வாழ்ந்த அம்மாபேட்டை மலை கிராமம் கண்டுபிடிக்கப்பட்டதை தெரிந்து கொண்டனர்.

அந்த கிராமத்தை சேர்ந்தவர்களின் மகன்கள், பேரப்பிள்ளைகள் மீண்டும் அம்மாபேட்டை மலை கிராமத்திற்கு வந்து குடிசை போட்டு அவர்கள் முன்னோர்கள் வணங்கிய கன்னிமார் அம்மன் கோவிலை கண்டுபிடித்து, சுத்தம் செய்து அம்மனை வணங்கி குடியேறியுள்ளனர். முன்னோர்கள் பயன்படுத்திய கிராம பொது கிணற்றையும் சொந்த செலவில் தூர்வாரி, மோட்டார் அமைத்து அவர்களுக்கு தேவையான குடிநீரையும் ஏற்பாடு செய்துள்ளனர். அதைப்போல் முன்னோர்கள் வாழ்ந்த வீடு இடிந்த நிலையில் இருப்பதை கண்டறிந்துள்ளனர்.

அம்மாபேட்டை கிராமத்தில் குடியேறிய மலைவாழ் மக்கள், அந்த நிலத்தை எங்களுக்கு வீட்டு மனை பட்டாவாக அரசு வழங்க வேண்டும், மின் இணைப்பு, சாலை வசதி செய்து கொடுக்க வேண்டும். ரேஷன் கார்டு, ஆதார் கார்டு ஆகியவற்றை இந்த முகவரிக்கு மாற்றிக் கொடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.

நடிகர் அஜித்குமார் நடித்த சிட்டிசன் சினிமா போல் காணாமல் போன கிராமத்தை 82 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கண்டுபிடித்து, அதே கிராமத்தில் மகிழ்ச்சியுடன் மலைவாழ் மக்கள் குடியேறிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்