மாவட்ட செய்திகள்

சீர்காழி அருகே கடற்கரையோரம் இறந்து கரை ஒதுங்கிய டால்பின்கள்

சீர்காழி அருகே கடற்கரையோரம் சமீப காலமாக டால்பின்கள் இறந்து கரை ஒதுங்குகின்றன. நேற்று ஒரே நாளில் மட்டும் 10-க்கும் மேற்பட்ட டால்பின்கள் இறந்து கரை ஒதுங்கின. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதால் அவைகளை உடனடியாக அகற்றி சுகாதார பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினத்தந்தி

சீர்காழி,

நாகை மாவட்டம் சீர்காழி பகுதி நீண்ட கடற்கரை கிராமங்களை கொண்ட பகுதியாகும். இங்கு விவசாயத்திற்கு அடுத்தபடியாக மீன்பிடி தொழில் பிரதான தொழிலாக செய்யப்பட்டு வருகிறது.

கடலூர் மாவட்டத்திற்கு அடுத்தபடியாக, நாகை மாவட்ட எல்லையான கொடியம்பாளையம் கிராமத்தில் இருந்து பழையாறு, திருமுல்லைவாசல், கீழமூவர்க்கரை, பூம்புகார் போன்ற எண்ணற்ற கடற்கரை கிராமங்கள் இந்த பகுதியில் உள்ளன.

இந்த நிலையில் சீர்காழி அருகே உள்ள கூழையார், காட்டூர், பழையார், தொடுவாய், திருமுல்லைவாசல் ஆகிய கிராமங்களில் கடற்கரையோரம் கடந்த சில மாதங்களாக அரிய வகை ஆமைகள், டால்பின்கள் ஏராளமாக இறந்து கரை ஒதுங்குகின்றன.

இந்த நிலையில் நேற்று திருமுல்லைவாசல், தொடுவாய், கூழையார் ஆகிய கிராமங்களில் கடற்கரையோரம் 10-க்கும் மேற்பட்ட டால்பின்கள் இறந்து கரை ஒதுங்கி கிடந்தன.

டால்பின்கள் இறந்து கிடப்பதால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு மற்றும் தொற்றுநோய் ஏற்படும் அபாய நிலை உள்ளது.

எனவே சம்பந்தப்பட்ட துறையினர் இந்த பகுதிகளில் கடற்கரையோரம் இறந்து கரை ஒதுங்கிய டால்பின்களை உடனடியாக அப்புறப்படுத்தி அங்கு சுகாதார பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், டால்பின்கள் இறப்பதற்கான காரணங்களை கண்டறிந்து அதனை தடுக்க வேண்டும் என்றும் மீன்வர்களும், அந்த பகுதி பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்