மாவட்ட செய்திகள்

திருச்சி விமான நிலையத்தில் அமைச்சர் விஜயபாஸ்கரின் ஆதரவாளர்கள் இடையே கோஷ்டி மோதல்

திருச்சி விமான நிலையத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆதரவாளர்கள் இடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டது.

தினத்தந்தி

செம்பட்டு,

தமிழக சுகாதாரத்துறை அமைச்சராக இருப்பவர் டாக்டர் விஜயபாஸ்கர். புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர். சென்னை சென்றிருந்த அவர், நேற்று விமானம் மூலம் திருச்சி வந்து அங்கிருந்து கார் மூலம் புதுக்கோட்டை செல்ல திட்டமிட்டிருந்தார். எனவே, அமைச்சர் விஜயபாஸ்கரை வரவேற்க கட்சி நிர்வாகிகள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பலர் கார்களில் திருச்சி விமான நிலையத்துக்கு முன்கூட்டியே வந்து காத்திருந்தனர்.

அங்கு வரவேற்க வந்திருந்தவர்களில் இலுப்பூர் முன்னாள் பேரூராட்சி தலைவர் குருபாபு என்கிற ராஜமன்னாரும், விராலிமலை (வடக்கு) ஒன்றிய முன்னாள் கவுன்சிலர் முத்துசாமியின் சகோதரரும், மகளிரணி இணை செயலாளர் கலைச்செல்வி கணவருமான நல்லூர் கருப்பையாவும் வந்திருந்தனர்.

கருப்பையா பற்றி சிலரிடம் ராஜமன்னார் செல்போனில் ஏதோ பேசியதாக கூறப்படுகிறது. இது விமான நிலையத்துக்கு வந்த கருப்பையா கவனத்துக்கு ஆதரவாளர்கள் சிலர் கொண்டு சென்றதாக கூறப்படுகிறது. இது அவருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இது குறித்து ராஜமன்னாரிடம் கேட்க, இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. ஒருவரையொருவர் அவதூறாக பேசிக்கொண்டனர்.

இந்த வாய்த்தகராறு முற்றவே ஆத்திரம் அடைந்த கருப்பையா, ராஜமன்னாரை எட்டி உதைத்து கீழே தள்ளினார். பின்னர் அவரது வேட்டியை உருவினார். அரை நிர்வாண கோலத்தில் பரிதவித்த அவர், சிறிது நேரம் கழித்து வேட்டி கிடைத்ததும் மடித்து கட்டி மீண்டும் தகராறில் ஈடுபட முயற்சித்தார். ஆதரவாளர்கள் சிலர் அதை தடுத்து விட்டனர். விமான நிலையத்தில் கோஷ்டி மோதல் ஏற்பட்டு வேட்டி உருவிய சம்பவத்தால் அங்கு பரப்பரப்பு ஏற்பட்டது.

இருவரிடையே ஏற்பட்ட மோதல் குறித்து அங்கிருந்த அ.தி.மு.க.நிர்வாகிகள் கூறுகையில், கருப்பையா பற்றி தவறான கருத்துகளை ராஜமன்னார் அமைச்சர் விஜயபாஸ்கரிடம் கூறி இருக்கிறார். அமைச்சரிடமே தவறாக கூறியதாக கருதியதால் ஏற்பட்ட ஆத்திரத்தில்தான் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது என்றனர். சென்னையில் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் சி.பி.ஐ. சோதனை நடந்தபோது, என்னை முதலில் துப்பாக்கியால் சுடுங்கள் என்று கூறியவர் கருப்பையா என்பது குறிப்பிடத்தக்கது.

விமானம் பிற்பகல் 2 மணிக்கு திருச்சி விமான நிலையம் வந்தது. அதில் இருந்து இறங்கி வந்த அமைச்சர் விஜயபாஸ்கரை ஆதரவாளர்கள் தனித்தனியே நின்று வரவேற்றனர். அங்கு ஆதரவாளர்களிடம் கைகுலுக்கிய அமைச்சர், காரில் ஏறி புதுக்கோட்டை புறப்பட்டு சென்றார்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு