மாவட்ட செய்திகள்

கே.ஆர்.எஸ்., கபினி அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரியில் திறக்கும் நீரின் அளவு மேலும் குறைப்பு

கே.ஆர்.எஸ்., கபினி அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரியில் திறந்துவிடப்படும் நீரின் அளவு நேற்று மேலும் குறைக்கப்பட்டது. இரு அணைகளில் இருந்தும் வினாடிக்கு 68 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

மண்டியா,

தென்மேற்கு பருவமழை, கர்நாடகத்தில் கடந்த மே மாதம் இறுதியில் தொடங்கியது. மலைநாடுகளான குடகு, சிக்கமகளூரு, சிவமொக்கா உள்ளிட்ட மாவட்டங்களிலும், கடலோர மாவட்டங்களான கார்வார், உடுப்பி, தட்சிணகன்னடா மாவட்டங்களிலும் வரலாறு காணாத அளவுக்கு தென்மேற்கு பருவமழை கொட்டி தீர்த்து வருகிறது.

தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் கர்நாடகத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. குறிப்பாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான குடகு, கேரள மாநிலம் வயநாடு ஆகிய மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. தற்போதும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் கடந்த 19-ந்தேதி மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா கண்ணம்பாடியில் உள்ள கே.ஆர்.எஸ். (கிருஷ்ணராஜ சாகர்) அணையும், மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகா பீச்சனஹள்ளியில் உள்ள கபினி அணையும் தனது முழுகொள்ளளவை எட்டின. இதனால் இரு அணைகளில் இருந்தும் தமிழகத்திற்கு கடந்த வாரம் ஒரு லட்சம் கனஅடி வீதம் தண்ணீர் காவிரியில் திறந்துவிடப்பட்டது. இதன் காரணமாக மேட்டூர் அணையும் தனது முழுகொள்ளளவை எட்டியது.

நேற்று காலை நிலவரப்படி 124.80 அடி கொள்ளளவு கொண்ட கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் 122.87 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 40,243 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அதே வேளையில் அணையில் இருந்து 38,202 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கே.ஆர்.எஸ். அணையில் 45.05 டி.எம்.சி. (ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி) நீர் சேமித்து வைக்கலாம். நேற்றைய நிலவரப்படி அணையில் 42.39 டி.எம்.சி. நீர் இருப்பு உள்ளது.

இதேப் போல் கடல் மட்டத்தில் இருந்து 2,284 அடி கொள்ளளவு கொண்ட கபினி அணையின் நீர்மட்டம் நேற்று காலை 2,282 அடியாக இருந்தது. அணையின் நீர்வரத்து வினாடிக்கு 28,079 கனஅடியாக இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 30,075 கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்பட்டு இருந்தது. கபினி அணையில் மொத்தம் 15.67 டி.எம்.சி. நீர் இருப்பு வைக்க முடியும். நேற்றைய நிலவரப்படி அணையில் 14.86 டி.எம்.சி. நீர் இருந்தது. இரு அணைகளில் இருந்தும் நேற்று வினாடிக்கு 68,277 கனஅடி நீர் காவிரியில் தமிழகத்திற்கு திறந்துவிடப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் இரு அணைகளில் இருந்தும் வினாடிக்கு 77 ஆயிரத்து 38 கனஅடி வீதம் நீர் திறந்துவிடப்பட்டு இருந்தது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால், அணைகளுக்கு வரும் நீரின் அளவு குறைந்துள்ளது. இதனால் அணைகளில் இருந்து திறந்துவிடப்படும் நீரின் அளவும் குறைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து நீர்ப்பாசனத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த 2 நாட்களாக மழை குறைந்த அளவிலேயே பெய்து வருகிறது. இதனால் அணைகளுக்கு வரும் நீரின் அளவை பொறுத்து, அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பை குறைத்து வருகிறோம். நீர் வரத்து அதிகமாக இருந்தால், அதற்கு ஏற்ப தண்ணீர் திறப்பின் அளவு அதிகரிக்கப்படும் என்றார்.

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி