வானூர்,
விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பத்தில் இந்திய முஸ்லிம் லீக் மகளிர் அணி சார்பில் நேற்று இரவு கல்வி விழிப்புணர்வு மகளிர் மாவட்ட மாநாடு நடைபெற்றது. இதில் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டார். அவரை தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பொன்முடி, ராதாமணி மற்றும் மாவட்ட துணை செயலாளர் மைதிலி ராஜேந்திரன், கோட்டக்குப்பம் நகர செயலாளர் சண்முகம், மாவட்ட வர்த்தக அணி தலைவர் ஜெயமூர்த்தி, ஒன்றிய செயலாளர் முரளி, மாவட்ட பிரதிநிதி பசீர், அவைத்தலைவர் அலி ஆகியோர் வரவேற்றனர்.
மாநாட்டிற்கு இந்திய முஸ்லிம் லீக் மகளிர் அணி தலைவர் மெகருன்னிசா தலைமை தாங்கினார். முன்னாள் ஊராட்சி ஒன்றிய தலைவி பரீதாபேகம், டாக்டர்கள் ஷாகிதாபேகம், சமீராபேகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஹத்திஜாபீவி வரவேற்றார்.
மாநாட்டில் இந்திய முஸ்லிம் லீக் தேசிய தலைவி தஷ்ரீப் ஜகான், மாநில பொதுச்செயலாளர் ஆயிஷா நிஷா, மாநில பொருளாளர் சஷ்மினாஸ் நிசாம் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.
மாநாட்டில் கனிமொழி எம்.பி. பேசியதாவது:-
பெண்கள் அடிப்படை கல்வியை எந்த சூழ்நிலையிலும் விட்டுவிடக்கூடாது. பெற்றோர்கள் தங்களது பெண் குழந்தைகளை உயர் கல்விகளை கற்க வைக்க வேண்டும். பெண்கள் எல்லோரும் அரசியல் மற்றும் தங்களது எதிர்காலத்தை முடிவு செய்யும் திறனை வளர்க்க வேண்டும். உத்தரபிரதேசம், ஜம்மு காஷ்மீரில் பெண்களுக்கு எதிராக நடந்த பாலியல் பிரச்சினை காரணமாக வருகிற பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா தோல்வி அடையும்.
இவ்வாறு அவர் பேசினார்.
மாநாடு முடிந்தபிறகு நிருபர்களுக்கு கனிமொழி எம்.பி. பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது.;-
மத்திய அரசு தமிழகத்தில் எதனை செய்தாலும் தமிழக அரசு ஒன்றும் சொல்வது கிடையாது. ஒவ்வொரு நாளும் ஆட்சி நீடித்தால் மட்டும் போதும் என்று தமிழக ஆட்சியாளர்கள் நினைக்கிறார்கள். கவர்னர் மாநில உரிமைகளில் தலையிடுவதை பற்றி தமிழக அரசு கவலைப்படுவதில்லை. காவிரி பிரச்சினையில் தி.மு.க. அனைத்து கட்சிகளுடன் ஒன்றிணைந்து செயல்படுகிறது.
தெலுங்கானா முதல்-அமைச்சர் சந்திரசேகரராவ் நேற்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசியது மரியாதை நிமித்தமான சந்திப்பு தான். 3-வது அணி அமைப்பதை பற்றி எதுவும் பேசவில்லை.
புதுச்சேரி கவர்னர் கிரண்பெடி கிராமங்களில் மக்கள் சுகாதாரமாக இருந்தால் தான் இலவச அரிசி என்று கூறியது தவறு. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இருக்கும்போது கவர்னர் எந்த உரிமைகளிலும் தலையிட அதிகாரம் கிடையாது.
இவ்வாறு அவர் கூறினார்.