ராமேசுவரம்,
ராமநாதபுரம் மாவட்டத்தில் அக்னி நட்சத்திர வெயில் பொதுமக்களை வாட்டி வருகிறது. பகல் நேரங்களில் அனல்காற்று வீசி வருகிறது. அதேநேரத்தில் ராமேசுவரம், பாம்பன், தனுஷ்கோடி பகுதிகளில் கடந்த 3 நாட்களாக சூறாவளிக் காற்று வீசி வருவதுடன் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது.
நேற்று மாலையிலும் பலத்த சூறாவளி காற்று வீசத்தொடங்கியது. இதனால் வாகன ஓட்டுநர்கள் சாலையில் பயணிக்க முடியாமல் அவதி அடைந்தனர். ராமேசுவரம் ரெயில் நிலையத்தில் முதல் நடைமேடை அருகே இருந்த தென்னை மரம் வேரோடு சாய்ந்து விழுந்தது. அப்போது அங்கு அமர்ந்திருந்த பயணிகள் ஓடி விட்டதால் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர்தப்பினர்.
இதேபோல் காற்றின்வேகத்துக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் ராமேசுவரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இருந்த மரமும் வேரோடு சாய்ந்தது.
ரெயில் நடுவழியில் நிறுத்தம்
நேற்று மாலை 5 மணிக்கு ராமேசுவரம் ரெயில் நிலையத்தில் இருந்து சென்னைக்கு ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டது. இந்த ரெயில் பாம்பன் ரெயில் பாலத்தை கடக்க அக்காள்மடம் அருகே சென்றபோது சுமார் 65 கிலோ மீட்டர் வேகத்துக்கு மேல் காற்று வீசியது.
இதையடுத்து, ரெயில் பாலத்தில் காற்றின் வேகத்துக்கு ஏற்றவாறு செயல்படும் தானியங்கி சிக்னல் செயல்படவில்லை. எனவே, ரெயில்வே அதிகாரிகள் கொடுத்த எச்சரிக்கையின் பேரில் அந்த எக்ஸ்பிரஸ் ரெயில் அக்காள்மடத்திலேயே நடுவழியில் நிறுத்தப்பட்டது. இரவு 8.30 மணி வரையிலும் சூறாவளிக்காற்றின் வேகம் குறையாததால் ரெயில் அங்கேயே நிறுத்தப்பட்டு இருந்தது.
ராமேசுவரம்- பாம்பன் இடையே காட்டுப்பகுதியில் ராமேசுவரம்-சென்னை எக்ஸ்பிரஸ் ரெயில் நீண்ட நேரம் நிறுத்தி வைக்கப்பட்டதால் பயணிகள் அதில் இருந்து இறங்கி ராமேசுவரம், பாம்பனுக்கு நடந்து சென்று அங்கிருந்து பஸ்களில் தங்கள் ஊர்களுக்கு புறப்பட்டுச் சென்றனர்.
இதுபற்றி ரெயில்வே அதிகாரிகள் தெரிவிக்கையில், காற்றின் வேகம் 55 கிலோ மீட்டருக்கு கீழ் குறைந்தால் மட்டுமே பாம்பன் பாலத்தில் ரெயில்களை இயக்கமுடியும் என்றனர்.
வேகம் குறைந்தது
இந்நிலையில், இரவு 9.30 மணிஅளவில் காற்றின் வேகம் குறைந்தது. இதையடுத்து ரெயிலை இயக்க முடிவு செய்யப்பட்டது.
நடுவழியில் நிறுத்தப்பட்டு இருந்த ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் ரெயில் 4 மணிநேரம் தாமதமாக புறப்பட்டு குறைந்த வேகத்தில் பாம்பன் பாலத்தை கடந்து சென்றது. தொடர்ந்து ராமேசுவரத்தில் இருந்து கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், சென்னை செல்லும் சேது எக்ஸ்பிரஸ், மதுரை பயணிகள் ரெயில்கள் ஆகியவை தாமதமாக புறப்பட்டு சென்றன.
மதுரையில் இருந்து ராமேசுவரம் சென்ற பயணிகள் ரெயில் ராமநாதபுரம் ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது.
கடல் சீற்றம்
இதற்கிடையே, ராமேசுவரம், மண்டபம் பகுதிகளில் கடல் தொடர்ந்து கொந்தளிப்புடன் காணப்படுகிறது. கடல் அலைகள் 10 அடி உயரத்துக்கு சீறி எழுந்து வருகின்றன.
கடல் கொந்தளிப்பு காரணமாக நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.