தஞ்சாவூர்,
தஞ்சை-புதுக்கோட்டை சாலையில் புதிய வீட்டுவசதி வாரிய குடியிருப்பு கட்டுவதற்காக 1979-ம் ஆண்டு தனியார்களிடம் இருந்து நிலம் கையகப்படுத்தப்பட்டது. ஏராளமானோரிடம் இருந்து நிலம் கையகப்படுத்தப்பட்டது. அப்போது நிலம் வழங்கியவர்களுக்கு பாதி தொகை தான் வழங்கப்பட்டது. இது குறித்து நில உரிமையாளர்கள் தஞ்சை முதன்மை சார்பு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை நீதிபதி விசாரணை செய்து, நில உரிமையாளர்களுக்கு நிலுவைத் தொகையை கருணைத்தொகையுடன் சேர்த்து வழங்க வேண்டும் என்று வருவாய்த்துறையினருக்கு உத்தரவு பிறப்பித்தார்.
இந்த தீர்ப்பை எதிர்த்து மதுரை ஐகோர்ட்டு கிளையில் மேல்முறையீடு செய்யப் பட்டது. இதை விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதி, கீழ்கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை உறுதி செய்தார். இதையடுத்து தீர்ப்பை நிறைவேற்றுவதற்கான மனுவை நில உரிமையாளர்கள் தஞ்சை முதன்மை சார்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இந்த மனுவை நீதிபதி விசாரணை செய்து, நிலுவைத் தொகை வழங்காததால் தஞ்சை வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ் பயன்படுத்தும் ஜீப்பை ஜப்தி செய்ய உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து வக்கீல் கோவிந்தராஜ், கோர்ட்டு கட்டளை நிறைவேற்றுனர் வனிதா ஆகியோர் தஞ்சை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு நேற்று சென்றனர்.
ஜீப் ஜப்தி
அங்கு வருவாய் கோட்டாட்சியர் சுரேசிடம் கோர்ட்டு உத்தரவை காண்பித்து அலுவலக ஜீப்பை ஜப்தி செய்து தஞ்சை கோர்ட்டுக்கு கொண்டு வந்தனர். இது குறித்து வக்கீல் கோவிந்தராஜ் நிருபர்களிடம் கூறும்போது, குடியிருப்பிற்காக நிலம் கையகப்படுத்தப்பட்டதில் தனியார்களுக்கு ரூ.30 லட்சம் வழங்க வேண்டியது இருந்தது. இதில் ரூ.15 லட்சம் வழங்கப்பட்டது. மீதமுள்ள ரூ.15 லட்சம் வழங்கப்படவில்லை. இந்த நிலுவைத் தொகையை வழங்காததால் கோட்டாட்சியர் அலுவலக ஜீப் ஜப்தி செய்யப்பட்டுள்ளது என்றார்.