திருத்தணி,
ஆந்திர மாநிலம் புத்தூரை சேர்ந்தவர் ராமுடு (வயது 35). இவருக்கும் நெல்லூர் மாவட்டம் இந்துகூர் பேட்டையை சேர்ந்த சிவபிரியா (28) என்ற பெண்ணுக்கும் 8 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.
இந்தநிலையில் சிவபிரியா புத்தூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் போது அங்கே வேலை செய்து வந்த திருத்தணி கார்த்திகேயபுரம் மோட்டூரை சேர்ந்த துர்கன் (30) என்பவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் சிவபிரியா கணவரை பிரிந்து மகள்களுடன் திருத்தணி கார்த்திகேயபுரம் மோட்டூரில் உள்ள துர்கன் வீட்டுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வந்து விட்டார்.
இந்தநிலையில் குடும்பத் தகராறில் சிவபிரியா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக திருத்தணி போலீசாருக்கு தெரியவந்தது. சிவபிரியாவின் உறவினர்கள் அவரது சாவில் மர்மம் இருப்பதாக திருத்தணி போலீசில் புகார் தெரிவித்தனர்.
போலீஸ் விசாரணையில், குடும்பத்தகராறில் ஆத்திரம் அடைந்த துர்கன் தனது தாய் விஜயா (50), நண்பர் லோகேஷ்(28) ஆகியோருடன் சேர்ந்து சிவபிரியா தூங்கும் போது தலையணையால் அவரது முகத்தை அமுக்கி வயரால் கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளார் என்பதும் பின்னர் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகம் ஆடியதும் தெரியவந்தது.
திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொன்னி உத்தரவின்பேரில் திருத்தணி துணை போலீஸ் சூப்பிரண்டு சேகர் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் முருகன் வழக்குப்பதிவு செய்து துர்கன், அவரது தாயார் விஜயா, நண்பர் லோகேஷ் ஆகியோரை கைது செய்து திருத்தணி கோர்ட்டில் ஆஜர்படுத்தி மாஜிஸ்திரேட்டு உத்தரவின் பேரில் புழல் சிறையில் அடைத்தனர்.