நாகர்கோவில்,
நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம் நடைபெறுவது வழக்கம். இதேபோல் திங்கட்கிழமையான நேற்றும் மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம் நடந்தது. முகாமுக்கு கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் வாங்கினார். அப்போது அவரிடம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுத்தனர்.
அதேபோல், மீனவர் தினத்தை முன்னிட்டு குமரி மாவட்ட மீன் தொழிலாளர் சங்க (சி.ஐ.டி.யூ.) பொதுச்செயலாளர் எஸ்.அந்தோணி, மாவட்ட தலைவர் அலெக்சாண்டர், கவுரவ தலைவர் என்.அந்தோணி உள்பட பலர் மனு கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:
ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 21ந் தேதி உலக மீனவர் தினமாக உலகம் முழுவதும் மீனவ மக்களால் அனுசரிக்கப்பட்டு வருகிறது. மீனவ மக்களின் உரிமைகள் அரசுகளாலும், அரசு எந்திரங்களாலும் தொடர்ந்து மறுக்கப்பட்டும், நிராகரிக்கப்பட்டும் வருகின்றன. இந்தநிலையில் குமரி மாவட்ட மக்களின் உயிர் மற்றும் வாழ்வாதார உரிமைகளை பாதுகாத்திட எங்களது கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கைக்காக சமர்ப்பிக்கிறோம்.
அதாவது குமரி மாவட்டத்தில் 48 மீனவ கிராமங்களிலும், 82 உள்நாட்டு மீனவ கிராமங்களிலும் சுமார் 4 லட்சம் மீனவர்கள் வசித்து வருகின்றனர். மீனவர்கள் உரிமைகளை பாதுகாக்க நீதிபதி வேணுகோபால் ஆணைய பரிந்துரையை ஏற்று மீனவருக்கான தனி சட்டசபை தொகுதி ஏற்படுத்த வேண்டும். நாகர்கோவில் நகராட்சியை மாநகராட்சியாக மாற்ற பல்வேறு மீனவ கிராமங்களையும், கிராம ஊராட்சிகளையும் இணைக்கும் மீனவர் விரோத நடவடிக்கையை உடனடியாக கைவிட வேண்டும். பாராளுமன்ற தேர்தல் வாக்குறுதியின் அடிப்படையில் மத்தியில் உள்ள பா.ஜனதா அரசு அனைத்து பகுதி மீனவ மக்களையும் பட்டியல் இன வகுப்பாக அறிவித்திட உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.
இனயம் பன்னாட்டு பெட்டக முனைய திட்டத்தை நிரந்தரமாக கைவிட வேண்டும். மீனவர் கிராமங்களை பாதுகாக்க குமரி மாவட்டம் முழுவதும் நிலைத்த, நீடித்த, ஒருங்கிணைந்த பாதுகாப்பு உத்திகள் கொண்ட கொல்லம் மூதாக் கரைத்திட்டம் போன்று குமரி மாவட்டத்திலும் நடைமுறைப்படுத்துவது அவசியம். மீன்பிடி தொழிலில் ஈடுபடும் மீனவர்களின் உயிரிழப்பு மற்றும் ஏற்பட்டாலோ இழப்பீடாக தற்போது மிகக்குறைவான தொகையே வழங்கப்படுகிறது. எனவே அதை ரூ.10 லட்சமாக உயர்த்தி உடனடியாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடலில் காணாமல் போகும் மீனவர்களை கண்டுபிடிக்கவும், விபத்தில் சிக்கும் மீனவர்களை மீட்கவும் கன்னியாகுமரியில் ஹெலிகாப்டர் நிறுத்தம் அவசியம் ஆகும். உள்நாட்டு மீனவர்களின் வாழ்வாதார பிரச்சினைகளுக்கு தீர்வுகாண குளம், ஆறு, அணைகளில் மீன்பிடிக்க அமலில் உள்ள தடைகளை அகற்றி உள்நாட்டு மீனவர்களுக்கு உரிமம் வழங்க வேண்டும் என்பன போன்ற தீர்மானங்கள் அதில் இடம் பெற்றிருந்தன.
அம்மாண்டிவிளை உரப்பனவிளையைச் சேர்ந்த ஜெயா என்பவர் ஒரு மனு கொடுத்துள்ளார். அதில் அவர், எனது கணவர் குணசேகரன் ஆசாரிபள்ளத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அம்மா காப்பீட்டுத் திட்ட வார்டில் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் ரூ.10 ஆயிரம் தந்தால்தான் அறுவை சிகிச்சை செய்ய முடியும் என்று கூறினார்கள். நான் பணம் இல்லை என்றதும், அப்படியானால் இங்கு சிகிச்சை அளிக்க முடியாது. வேண்டுமானால் தூத்துக்குடி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லுங்கள் என்றனர். எங்களது ஏழ்மையான நிலையை கருத்தில் கொண்டு எனது கணவர் குணசேகரனுக்கு சிகிச்சை தொடர உத்தரவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டு உள்ளார்.
திக்கணங்கோடு அருகே ஆணாட்டுவிளை தெங்கன்குழியைச் சேர்ந்த ஊர் பொதுமக்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:
எங்கள் ஊரில் தெருவிளக்கு அமைத்து தரக்கோரி பஞ்சாயத்து செயல் அலுவலர் வாயிலாகவும், தக்கலை ஊராட்சி ஒன்றிய ஆணையரிடமும் பல மனுக்கள் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர். இதற்கிடையே மின்விளக்கு அமைக்க மின் வாரியத்துக்கு விண்ணப்பித்துள்ளனர். தற்போது மின்வாரிய அலுவலகத்தில் சென்று கேட்டபோது ஊராட்சி அலுவலகத்தில் நிலுவையில் உள்ள பாக்கி ரூபாய் செலுத்தினால் மட்டுமே தெருவிளக்கு அமைத்து தருவோம் என்று கூறுகிறார்கள். ஆகவே பொதுமக்கள் உயிரை பறிக்கக்கூடிய வழிப்பாதையில் தெருவிளக்கு அமைத்துதர கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.
கஞ்சிக்குழி அருகே உள்ள காட்டுவிளையைச் சேர்ந்த ரிச்சர்டு சாலமோன் என்பவர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தார். அதில் அவர், நான் ஆட்டோ ஓட்டும் தொழில் செய்து வருகிறேன். கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து நான் நோய்வாய்ப்பட்டு இரு சிறுநீரகங்களும் செயலிழந்து விட்டன. தற்போது இதற்காக மருத்துவ சிகிச்சையில் உள்ளேன். டயாலிஸ் மூலம் உயிர் வாழ்ந்து வருகிறேன். கடந்த 2015ம் ஆண்டு நான் கருங்கல்லில் உள்ள ஒரு வங்கி கிளையில் புதிய ஆட்டோ வாங்குவதற்காக ரூ.1 லட்சம் கடனாகப் பெற்றேன். அந்தக்கடனை 42 மாத காலத்தில் அடைக்க வேண்டும் என்ற நிபந்தனையில் கடன் பெற்றிருந்தேன். நான் கடன்பெற்ற நாளில் இருந்து நோய்வாய்ப்பட்ட பிறகு வரை கடன் தொகையை தவணை தவறாமல் செலுத்தியுள்ளேன். கடந்த ஏப்ரல் மாதத்துக்குப்பிறகு மருத்துவ செலவை சமாளிக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டேன். இதனால் கடந்த சில நாட்களுக்கு முன் வங்கி அதிகாரி எனது ஆட்டோவை பறிமுதல் செய்து, கொண்டு சென்றார். எனவே பறிமுதல் செய்யப்பட்ட ஆட்டோவை திருப்பித்தர வங்கி மேலாளருக்கு உத்தரவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
இந்து மக்கள் கட்சி குமரி மாவட்ட தலைவர் முத்து தலைமையில் பலர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:
அம்பேத்கர் கொள்கைகளுக்கு மாறாக, சட்டவிரோதமாக இந்து தாழ்த்தப்பட்டோர் என சான்றிதழ் பெற்று சிலர் மோசடி செய்து வருகின்றனர். குறிப்பாக கல்வித்துறையில், மருத்துவத்துறையில், காவல்துறையில் இவர்களின் ஆதிக்கம் அதிகம் நிலவுகிறது. இதன்காரணமாக இன்றளவும் இந்து தாழ்த்தப்பட்ட மக்கள் தங்கள் உரிமை மற்றும் வாய்ப்பை இழந்துள்ளனர். எனவே இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுத்து இந்து தாழ்த்தப்பட்டோர் ஒதுக்கீட்டு சலுகைகளை பாதுகாக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் என மனுவில் கூறப்பட்டுள்ளது.