கோவை,
கோவை ஆர்.எஸ்.புரம் பாதர்ராண்டி வீதியில் ரவிசங்கர் (வயது 50) என்பவருக்கு சொந்தமான தங்க நகை தயாரிப்பு தொழிற்சாலை உள்ளது. கடந்த 22-ந் தேதி இங்குள்ள கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய சென்ற வேடப்பட்டியை சேர்ந்த கவுரிசங்கர் (21), ரத்தினபுரியை சேர்ந்த ஏழுமலை (23) மற்றும் அந்த நிறுவன மேற்பார்வையாளர் சூர்யகுமார் (23) ஆகியோர் விஷவாயு தாக்கி இறந்தனர். இது தொடர்பாக அந்த தொழிற்சாலை உரிமையாளர் ரவிசங்கரை போலீசார் கைது செய்தனர்.
விஷவாயு தாக்கி பலியானவர்களின் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க வேண்டும். அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவேண்டும் என்று பல்வேறு அமைப்பினர் மாவட்ட கலெக்டர் ஹரிகரனிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
இந்தநிலையில் விஷ வாயு தாக்கி 3 பேர் பலியான சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக தேசிய தூய்மை பணியாளர் நல ஆணைய உறுப்பினர் ஜெகதீஸ்கிர்மானி நேற்று கோவை வந்தார். அவர் சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன்பிறகு அவர், பின்னர் அவர் விஷவாயு தாக்கி இறந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். 3 பேரின் குடும்பத்தினருக்கும் தலா ரூ.10 லட்சம் நிவாரண நிதிக்கான காசோலையை வழங்கினார்.
அப்போது, கவுரிசங்கரின் தாயார் செல்வி என்பவர் தனக்கு சொந்தவீடு இல்லை என்று கூறினார். அவரிடம் சொந்த வீடு கட்டித்தர உரிய நடவடிக்கை எடுக்கப்படும். சூரியகுமாரின் தாயார் யசோதாவுக்கு அரசு வேலை வாய்ப்பு வழங்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். ஏழுமலையின் தம்பி பூபதி பிளஸ்-2 படித்து வருகிறார். அவருக்கு உயர்கல்வி படிக்க மாவட்ட நிர்வாகம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேசிய தூய்மை பணியாளர் நல ஆணைய உறுப்பினர் ஜெகதீஸ் கிர்மானி தெரிவித்தார்.
கோவையில் கழிவுநீர் சுத்தம்செய்யும் போது 3 பேர் பலியான சம்பவம் நடந்த இடத் தை பார்வையிட்டு ஆய்வு செய்ய வந்துள்ளேன். கழிவுநீர் தொட்டி பாதுகாப்பான உபகரணங்கள் கொண்டு சுத்தம் செய்யப்படுகிறதா? இதில் ஈடுபடும் தொழிலாளர்கள் முறையான பாதுகாப்பு கவசம் அணிகிறார்களா? என்பதை அதிகாரிகள் ஆய்வு செய்யவேண்டும். பகல் நேரங்களில் மட்டுமே கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யவேண்டும்.
தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி போன்ற உள்ளாட்சி அமைப்பு அதிகாரிகள் தொழிற்சாலைகளில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். கழிவுநீர் தொட்டிகளில் உள்ள கழிவுகளை அகற்ற பயன்படுத்தப்படும் லாரிகளில் முறையான பாதுகாப்பு உபகரணங்கள் உள்ளதா? என்பதையும் ஆய்வு செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது, கோவை மாவட்ட கலெக்டர் ஹரிகரன், போலீஸ் துணை கமிஷனர் லட்சுமி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மூர்த்தி, ஆதிதிராவிடர் நல ஆணைய உறுப்பினர் செந்தில்வேல், கோவை மாநகராட்சி தனி அதிகாரி விஜயகார்த்திகேயன் உள்பட அதிகாரிகள், போலீசார் உடன் இருந்தனர்.