தஞ்சாவூர்,
தஞ்சையை அடுத்த காசவளநாடு தெக்கூர் கிராமத்தின் நடுவே புது ஆறு செல்கிறது. இந்த ஆறு நடுவே செல்வதால் ஆற்றின் மேற்கு பகுதியிலும், கிழக்குப்பகுதியிலும் 100-க்கும் மேற்பட்ட வீடுகளில் பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியினர் பயன்படுத்துவதற்காக ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் ஆற்றின் குறுக்கே ஒரு மீட்டர் அகலத்தில் நடைபாலம் கட்டப்பட்டது.
இந்த பாலத்தின் வழியாக பொதுமக்கள் நடந்து செல்லவும், கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்து செல்லவும் பயன்படுத்தி வருகின்றனர். மேலும், நடூர், கொல்லங்கரை, மருங்குளம், வடக்குப்பட்டு, வேங்கராயன்குடிக்காடு, கோவிலூர், ஈச்சங்கோட்டை, அருமுளை, நாட்டரசன்கோட்டை, பஞ்சநதிக்கோட்டை, ஆழிவாய்க்கால், கருக்காக்கோட்டை, மேலஉளூர், காட்டுக்குறிச்சி உள்ளிட்ட 30 கிராம மக்கள் இரு சக்கர வாகனங்களில் செல்லவும், நடந்து செல்லவும் இந்த பாலத்தை தினமும் பயன்படுத்தி வருகின்றனர்.
மேலும், தெக்கூர் கிராமத்தில் மேற்கு பகுதியில் யாரேனும் இறந்துவிட்டால் அவர்களின் உடலை தகனம் செய்ய கிழக்குப் பகுதியில் உள்ள சுடுகாட்டுக்கு செல்ல இந்த நடைப்பாலத்தின் வழியாக செல்ல முடியாததால் ஐந்து கிலோ மீட்டர் தூரம் சுற்றிக்கொண்டு சுடுகாட்டுக்கு இன்றளவும் சென்று வருகின்றனர்.
ஆற்றில் தண்ணீர் செல்லும் போது, இந்த பாலத்தின் வழியாக சென்ற பலர் நிலைதடுமாறி ஆற்றுக்குள் விழுந்து உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பாலத்தில் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டு எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. பாலத்தின் இருபுறமும் இரும்பால் ஆன கைப்பிடிகள் அப்போது அமைக்கப்பட்டது. அந்த தடுப்பு இரும்புகள் உடைந்து எவ்வித பாது காப்பும் இல்லாமல் உள்ளது.
இடிந்து விழும் நிலையில் உள்ள இந்த பாலத்தை அகற்றிவிட்டு, ஆற்றில் தண்ணீர் இல்லாத போதே புதிய பாலம் நான்கு சக்கர வாகனங்கள் செல்லக்கூடிய வகையில் அமைத்துத் தர வேண்டும் என அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.