உலக அளவில் மொத்தம் இரண்டு குடும்பங்களைச் சார்ந்த ஏழு வகையான கடல் ஆமைகள் உள்ளன. அதாவது, கடினமான மேற்புற ஓடுகளை கொண்ட ஆமைகள், கடினமான மேற்புற ஓடுகள் இல்லாத ஆமைகள் என இரண்டு குடும்பங்கள் உள்ளன. இதில் மொத்தமுள்ள ஏழு வகை ஆமைகளில், இந்தியக் கடற்பரப்பில் ஐந்து வகைகள் காணப்படுகின்றன.
அவை பெருந்தலை ஆமை, பேராமை, அழுங்காமை, பங்குனி ஆமை ஆகியவை கடினமான மேற்புற ஓடுகளைக் கொண்டவை. தோனி ஆமைக்குக் கடினமான மேற்புற ஓடு இல்லை. இவை அனைத்தும் இந்தியக் கடற்பரப்பில் காணப் படுகின்றன. அனைத்து வகையான கடல் ஆமைகளும் அழிவின் விளிம்பில் உள்ளதாக இயற்கைப் பாதுகாப்புக்கான சர்வதேச சங்கம் கணித்துள்ளது.
கடல் ஆமைகள் மாறுபட்ட இனப்பெருக்கப் பண்பைக் கொண்டவை. அவை, முட்டையிடுவதற்காக பல ஆயிரம் கிலோ மீட்டர் பயணித்து முட்டையிடும் இடத்தை அடைகின்றன. ஒரு பெண் ஆமை, பல ஆண் ஆமைகளுடன் இனச்சேர்க்கை புரிகிறது. ஆண் ஆமைகளின் விந்தை சில மாதங்களுக்கு தன் உடலில் சேமித்து வைக்கும் தன்மையை அது கொண்டிருக்கிறது. முட்டை உருவான பிறகு, பெண் ஆமைகள் மணற்பாங்கான கடற்பகுதியில் முட்டையிடுகின்றன. இதில் ஆச்சரியமான அம்சம் என்னவென்றால், ஒரு பெண் ஆமை எந்த கடற்பகுதியில் பிறந்ததோ, அதே கடற்பகுதியில் தான் முட்டையிடுகிறது. பங்குனி ஆமைகள், கூட்டமாக ஒரே வேளையில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் முட்டையிடுகின்றன.
பெண் ஆமைகள் கடல் நீரிலிருந்து வெளியேறி பாதுகாப்பான இடத்தில் துடுப்புகளின் உதவியால் சின்னச் சின்ன குழிகளைத் தோண்டி முட்டையிடுகின்றன. பிறகு அந்தக் குழியை மூடிவிட்டு கடலுக்குத் திரும்பி விடுகின்றன. பொதுவாக இனப்பெருக்க காலத்தில் ஆமைகள் 50லிருந்து 300 முட்டைகள் வரை இடும் வல்லமையுடையவை. முட்டையிட்ட 60 நாட்களுக்குப் பிறகு முட்டையிலிருந்து குஞ்சுகள் வெளியேறும்.
கடல் ஆமைகளின் ஆண்-பெண் விகிதம், வெப்பநிலையைப் பொறுத்தே அமைவது மற்றொரு ஆச்சரியம். முட்டையிட்ட மணல் பகுதியின் வெப்பநிலை 85 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் அதிகமாக இருந்தால், அனைத்து முட்டைகளும் பெண் குஞ்சுகளாக இருக்கும். 85 டிகிரி பாரன்ஹீட்டுக்குக் குறைவாக இருந்தால், அனைத்து முட்டைகளும் ஆண் குஞ்சுகளாக இருக்கும். இதில் மிகவும் குறிப்பிடத்தக்க விஷயம், ஒரு பெண் ஆமை மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் முட்டையிடும்.
உலகமயமாக்கல், தொழில்மயமாக்கல் உள்ளிட்ட காரணங்களால் கடற்கரைப் பகுதிகளில் கட்டுப்பாடற்ற வளர்ச்சி ஏற்பட்டு, ஆமைகள் முட்டையிடும் பகுதிகள் அனைத்தும் அழிக்கப்பட்டு வருகின்றன. கடற்கரை முழுவதுமிருக்கும் உல்லாச விடுதிகள், உணவகங்களின் பிரகாச விளக்குகளால் முட்டையிலிருந்து வெளிவரும் ஆமைக் குஞ்சுகள் கடலுக்குள் போவதற்கு பதிலாக, நிலப்பரப்பை நோக்கித் திரும்பி உயிர் விடுகின்றன. தவிர, ஆமைகளும் அவற்றின் முட்டைகளும் உணவுக்காக வேட்டையாடப்படுகின்றன. இதுவே ஆமையினங்களின் வீழ்ச்சிக்கு முக்கியக் காரணம்.