தஞ்சாவூர்,
மாமன்னன் ராஜராஜ சோழனால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தஞ்சை பெரிய கோவில் தமிழர்களின் கட்டிட கலைக்கும், சிற்ப கலைக்கும் எடுத்துக்காட்டாக திகழ்கிறது. உலக பிரசித்தி பெற்ற இந்த கோவிலை உலக பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோ நிறுவனம் அறிவித்துள்ளது.
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தொல்பொருள்துறை பராமரித்து வரும் இந்த கோவிலில் காணப்படும் மூலவர் பெருவுடையார் என்று தமிழிலும், பிரகதீஸ்வரர் என வடமொழியிலும் அழைக்கப்படுகிறார். உலகில் உள்ள சிவாலயங்களுக்கு எல்லாம் மகுடமாக தஞ்சை பெரிய கோவில் திகழ்கிறது.
இந்த கோவிலில் மராட்டா வளைவு, கேரளாந்தகன் வாயில், ராஜராஜன் வாயில் என 3 வாயில்கள் உள்ளன. கேரள மன்னன் பாஸ்கர ரவிவர்மனுடன் போர் தொடுத்து ராஜராஜ சோழன் வெற்றி பெற்றதன் நினைவாக கேரளாந்தகன் கோபுரம் கட்டப்பட்டது. அதற்கு அடுத்த கோபுரம் தான் ராஜராஜன் கோபுரம்.
இந்த கோபுரத்திற்கு எதிரே 16 கால் மண்டபத்தில் மிகப்பெரிய நந்தி சிலை உள்ளது. இது, நாயக்கர் மன்னர் காலத்தில் கட்டப்பட்டது. இந்த மண்டபம் 54 அடி சுற்றளவும், 13 அடி உயரமும் கொண்டவை. ராஜராஜ சோழன் காலத்திலான நந்தி சிலையானது வராகி அம்மன் சன்னதி அருகே உள்ள பிரகாரத்தில் வைக்கப் பட்டுள்ளது.
கருவறைக்கு மேல் வானுயர கோபுரம் உள்ளது. இதன் உயரம் 216 அடியாகும். திருச்சுற்று மாளிகையின் வடக்கு, மேற்கு புறங்களில் 252 லிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இப்படி சிறப்பு வாய்ந்த கோவிலில் பெரியநாயகி அம்மன், சண்டிகேஸ்வரர், முருகன், விநாயகர், வராகி அம்மன், கருவூரர், நடராஜர் ஆகிய சன்னதிகளும் உள்ளன. தஞ்சை பெரிய கோவிலுக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு குறைவான அளவே சுற்றுலா பயணிகள் வந்து சென்றனர்.
ஆனால் தற்போது தினமும் வெளிநாடு, வெளி மாநிலம், வெளி மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் தஞ்சை பெரியகோவிலுக்கு வந்து சிற்பங்களையும், கட்டிட கலையையும் பார்த்து வியந்து செல்கின்றனர்.
கோடை காலம் நிறைவடைந்தாலும் தஞ்சையில் வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்து வருகிறது. பெரியகோவில் வளாகத்தில் கற்கள், செங்கல் போன்றவற்றால் தளம் அமைக்கப்பட்டுள்ளது. வெயில் அதிகரிக்கும்போது கற்களும், செங்கற்களும் சுடும். இதில் சுற்றுலா பயணிகள் நடந்து செல்லும்போது அவர்களது கால்கள் சுடுவதால் பெரும்பாலான பயணிகள் நிழலை தேடி ஓடி வந்தனர்.
முதியவர்கள், கைக்குழந்தைகளுடன் வரும் தாய்மார்கள் என பக்தர்கள் மிகுந்த சிரமப்பட்டு வந்தனர். பக்தர்களின் இந்த சிரமத்தை தவிர்க்கும் வகையில் பெரிய கோவிலை சுற்றிலும் சுற்றுலா பயணிகள், பக்தர்கள் நடந்து செல்வதற்கு வசதியாக தரைவிரிப்புகள் விரிக்கப்பட்டன. இதில் நடந்து செல்வதால் சூடு கொஞ்சம் குறைவாகவே காணப்படும். இதனால் சுற்றுலா பயணிகளும், பக்தர்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்த நிலையில், ராஜராஜன் கோபுரத்தில் இருந்து நந்தி மண்டபம் மற்றும் பெருவுடையார் சன்னதிக்கு செல்லும் வழியிலும், நந்தி மண்டபத்தில் இருந்து ராஜராஜன் கோபுரம் வரையிலும் விரிக்கப்பட்டிருந்த தரை விரிப்புகள் அகற்றப்பட்டு விட்டன. மேலும் வராகி அம்மன் சன்னதி பகுதியில் விரிக்கப்பட்டுள்ள தரை விரிப்புகளும் சரியாக விரிக்கப்படாமல் ஆங்காங்கே சுருண்ட நிலையில் கிடக்கிறது. பெருவுடையாரை தரிசனம் செய்து விட்டு பக்தர் வெளியில் வரக்கூடிய பகுதியில் விரிக்கப்பட்டிருந்த தரை விரிப்புகளும் அகற்றப்பட்டு விட்டன. இப்படியாக பெரிய கோவில் உள்பிரகார வளாகம் முழுவதும் ஆங்காங்கே விரிக்கப்பட்டிருந்த தரை விரிப்புகள் அகற்றப்பட்டு விட்டன.
நேற்று வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் தஞ்சை பெரிய கோவிலில் தரை தளம் அதிகமாக சுட்டது. தரை விரிப்புகளும் ஆங்காங்கே அகற்றப்பட்டு இருந்ததால் சூடு தாங்க முடியாமல் கோவிலுக்கு வந்திருந்த பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் மிகுந்த அவதிப்பட்டனர். சூட்டில் இருந்து தப்பிக்க ராஜராஜன் கோபுரத்தில் இருந்து பெருவுடையார் சன்னதிக்கு எல்லோரும் ஓடினர்.
பெண்கள் பலர் கைக்குழந்தைகளை தூக்கிக் கொண்டு ஓடியதை பார்க்க முடிந்தது. பலர் கோவிலின் பிரகாரத்திலேயே நடந்து வந்து நடராஜர் சன்னதிக்கு பின்புறத்தில் கீழே இறங்கி ராஜராஜன் கோபுரத்தை நோக்கி ஓடி வந்தனர். இப்படி ஒடி, ஓடியே ஒவ்வொரு சன்னதியிலும் தரிசனம் செய்தனர். பெண்கள் பலர் ஓடவும் முடியாமல், சூட்டை தாங்கவும் முடியாமல் மிகவும் அவதிப்பட்டனர். பெரியவர்கள் நிலையோ மிகவும் பரிதாபமாக இருந்தது.
கோவிலில் விரிக்கப்பட்டு இருந்த தரைவிரிப்புகள் சுருட்டப்பட்டு கோவிலின் ஒரு பகுதியில் வைக்கப்பட்டு இருந்தது. இந்த தரை விரிப்புகளை ஏற்கனவே விரிக்கப்பட்டது போல தரையில் விரித்து பக்தர்களை வெயிலின் சூட்டில் இருந்து பாதுகாக்க தொல்பொருள்துறையினரும், இந்து சமய அறநிலையத் துறையினரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பக்தர்களின் எதிர்பார்ப்பாகும்.