வாக்கு எண்ணும் மையம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி, முதுகுளத்தூர், ராமநாதபுரம், திருவாடானை ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தலின்படி, மாவட்டத்தில் வருகிற 2021 சட்டமன்ற தேர்தல் தொடர்பான பல்வேறு முன்னேற்பாடு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக, தேர்தல் வாக்கு எண்ணும் மையத்தில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.
ஆய்வு
தேர்தல் வாக்குப்பதிவில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் வாக்காளர் சரிபார்க்கக்கூடிய எந்திரங்கள் அனைத்தையும் சட்டமன்ற தொகுதிகள் வாரியாக பிரித்து பாதுகாப்பாக வைக்கும் பாதுகாப்பு அறைகள், வாக்கு எண்ணும் அறைகள் ஆகியவற்றின் இடவசதி மற்றும் தற்போதைய நிலை, வாக்கு எண்ணும் பணிகளின் போது மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை பாதுகாப்பு அறையிலிருந்து வாக்கு எண்ணும் அறைக்கு கொண்டு செல்வதற்கான வழி, வேட்பாளர்கள், வேட்பாளர்களின் முகவர்கள், தேர்தல் அலுவலர்கள் வாக்கு எண்ணும் அறைக்கு வந்து செல்வதற்கான வழி என முறையே திட்டமிடுதல் குறித்து ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வின் போது, மாவட்ட வருவாய் அலுவலர் சிவகாமி, உதவி தேர்தல் அலுவலர்கள் பரமக்குடி ஆர்.டி.ஓ. தங்கவேல், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் மணிமாறன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் செந்தில்குமார், உதவி செயற் பொறியாளர் குருதிவேல்மாறன், துணை போலீஸ் சூப்பிரண்டு வெள்ளைத்துரை, அண்ணா பல்கலைக்கழக அரசு பொறியியல் கல்லூரி முதல்வர் ஜெகன், தாசில்தார்கள் மார்ட்டின், முருகவேல், கோவிந்தன் உள்பட அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.
முதல்நிலை சோதனை
அதே போல ராமநாதபுரம் வேளாண்மை ஒழுங்குமுறை விறபனைக்கூட சேமிப்பு கிட்டங்கியில் நடைபெற்று வரும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களின் முதல்நிலை சோதனை பணிகளையும் கலெக்டர் ஆய்வு செய்தார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:- 2021 சட்டமன்ற தேர்தலில் பயன்படுத்துவதற்காக ராமநாதபுரம் வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனைக்கூட சேமிப்பு கிட்டங்கியில் 3, 294 மின்னணு வாக்கு செலுத்தும் எந்திரங்கள் மற்றும் 2, 270 வாக்குப்பதிவு எந்திரங்களும், 2, 524 வாக்காளர் சரிபார்க்கக்கூடிய தணிக்கை எந்திரங்கள் பாதுகாப்பாக இருப்பு வைக்கப்பட்டுள்ளன. இந்த எந்திரங்களின் செயல்திறனை உறுதி செய்வதற்கு அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் முதல்நிலை சோதனை செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.. இப்பணிகளை 29-ந் தேதிக்குள் நிறைவேற்றிட திட்டமிடப்பட்டுள்ளது. இப்பணிகளில் வெளிப்படைத் தன்மையினை உறுதி செய்திட வீடியோ பதிவு செய்திடவும், சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணித்திடவும் நடவடிக்கை மேற்பொள்ளப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு எந்திரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறை இரட்டை பூட்டு முறையில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.அதேபோல 24 மணி நேரமும் சுழற்சி முறையில் ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினார்.
இந்த ஆய்வின்போது ராமநாதபுரம் சப்-கலெக்டர் சுகபுத்ரா, தாசில்தார்கள் ராமநாதபுரம் முருகவேல், தேர்தல் பிரிவு மார்ட்டின் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் உடனிருந்தனர்.