புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ள கீழகரும்பிரான் கோட்டையை சேர்ந்தவர் புஷ்பராஜ். இவரது மனைவி ராதா (வயது 32). புஷ்பராஜ் வெளிநாட்டில் தங்கி வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் ராதா தனது செல்போன் பழுதாகியிருந்ததால் அதை சரி செய்வதற்காக புதுக்கோட்டை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு செல்போன் கடைக்கு வந்துள்ளார். இதில் காரைக்குடியை சேர்ந்த சிதம்பரம் மகன் கைலாசம் (33) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இதில் இருவரும் அடிக்கடி சந்தித்து வந்தனர். இந்நிலையில் ராதாவின் கணவர் வெளிநாட்டில் இருந்து விடுமுறைக்காக ஆலங்குடிக்கு வந்துள்ளார்.
அப்போதும் ராதா, கைலாசத்துடன் தொடர்பில் இருந்தது புஷ்பராஜ்க்கு தெரியவந்தது. இதனால் புஷ்பராஜ் தனது மனைவியை கண்டித்துள்ளார். தங்களது கள்ளக்தொடர்புக்கு ராதாவின் கணவர் இடைஞ்சலாக இருப்பதால் அவரை கொலை செய்ய முடிவு செய்தனர். அதன்படி கடந்த 18.12.2014-ந்தேதி புஷ்பராஜ் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது வீட்டிற்கு வந்த கைலாசம் ராதாவுடன் சேர்ந்து வீட்டில் இருந்த கட்டையால் புஷ்பராஜின் தலையில் அடித்து தாக்கினர் இதில் படுகாயம் அடைந்த புஷ்பராஜ் சம்பவ இடத்திலேயே இறந்து போனார்.
பின்னர் இறந்து போன புஷ்பராஜின் உடலை வீட்டிற்குள் ஒரு மறைவான இடத்தில் வைத்து போர்வையால் மூடிவிட்டனர். பின்னர் கைலாசம் அங்கிருந்து சென்றுவிட்டார். ராதாவும் எதுவும் நடக்காதது போல் வீட்டில் இருந்தார். அப்போது புஷ்பராஜின் அண்ணன் செல்வகுமார் தற்செயலாக அங்கு வந்துள்ளார். ராதாவிடம் தனது தம்பி புஷ்பராஜ் எங்கே என்று கேட்டுள்ளார். அதற்கு ராதா முன்னுக்கு பின் முரணாகவும் பதற்றமாகவும் பதில் அளித்துள்ளார். இதில் சந்தேகம் அடைந்த செல்வகுமார் வீட்டினுள் தேடிபார்த்தார். அப்போது வீட்டின் மூலையில் புஷ்பராஜ் உடல் போர்வையில் மூடியிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இந்த சம்பவம் குறித்து செல்வகுமார் ஆலங்குடி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ராதா மற்றும் அவரது கள்ளக்காதலன் கைலாசத்தை கைது செய்தனர்.
இதைத்தொடர்ந்து புதுக்கோட்டை கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் ஆலங்குடி போலீசார் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி கிங்ஸ்லி கிறிஸ்டோபர் நேற்று தீர்ப்பு கூறினார். இதில் ராதா மற்றும் கைலாசத்துக்கு புஷ்பராஜை கொலை செய்த குற்றத்திற்காக ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், கொலைக்கு சதித்திட்டம் தீட்டியதற்காக மேலும் ஒரு ஆயுள் தண்டனையும் ரூ.5 ஆயிரம் அபராதமும், அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்ததற்காக கைலாசத்திற்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும், அபராத தொகையை கட்ட தவறினால் ஒவ்வொரு அபராதத் திற்கும் மேலும் 3 மாத சிறை தண்டனையும் அனுபவிக்க வேண்டும் என்றும் இந்த தண்டனைகளை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் சிறப்பு அரசு வழக்கறிஞராக ராமராஜ் ஆஜராகி வாதாடினார்.