கூடலூர்,
நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் காட்டுயானைகள் ஊருக்குள் வருவது அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் பீதியில் உள்ளனர். கூடலூர் அருகே ஓவேலி பேரூராட்சிக்கு உட்பட்ட ஆரோட்டுப்பாறை பகுதியில் நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு வனத்தில் இருந்து வெளியேறி காட்டுயானை ஒன்று ஊருக்குள் வந்தது. பின்னர் அதே பகுதியை சேர்ந்த விவசாயி ஹரிராமன் என்பவரது வீட்டை முற்றுகையிட்டது. அப்போது ஹரிராமன் வீட்டுக்குள் தூங்கி கொண்டு இருந்தார்.
இதற்கிடையில் வீட்டின் சுவரை காட்டுயானை உடைத்தது. உடனே சத்தம் கேட்டு எழுந்த ஹரிராமன், வீட்டின் முன்பு காட்டுயானை நிற்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தொடர்ந்து காட்டுயானை வீட்டு சுவரை உடைத்து கொண்டே இருந்தது. இதனால் பீதி அடைந்த ஹரிராமன் தப்பிக்க நினைத்தார். ஆனால் காட்டு யானையிடம் சிக்கி விடும் சூழல் காணப்பட்டது. இதையொட்டி வீட்டுக்குள் இருந்த கட்டிலுக்கு அடியில் சென்று படுத்து கொண்டார்.
மேற்கூரை சேதம்
இதனிடையே சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் திரண்டு வந்து காட்டுயானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். இதனால் காட்டுயானை அங்கிருந்து சென்றது. மேலும் கட்டிலுக்கு அடியில் பதுங்கிய ஹரிராமனை பொதுமக்கள் மீட்டனர்.
இதைத்தொடர்ந்து நேற்று அதிகாலை 2 மணிக்கு அப்பகுதியில் வசிக்கும் அப்துல்சமீது என்பவரின் வீட்டை காட்டுயானை முற்றுகையிட்டது. தொடர்ந்து அவரின் வீட்டு மேற்கூரையை சேதப்படுத்தியது. மேலும் அதே பகுதியில் உள்ள சிலரின் வீட்டு மேற்கூரைகளை காட்டுயானை உடைத்தது. இதனால் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் பொதுமக்கள் இருந்தனர். பின்னர் காலையில் காட்டுயானை அங்கிருந்து சென்றது.
உரிய இழப்பீடு
இதுகுறித்து தகவல் அறிந்த ஓவேலி வனச்சரகர் (பொறுப்பு) ராமகிருஷ்ணன், வன காப்பாளர் சுபேத்குமார் உள்ளிட்ட வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சேதம் அடைந்த வீடுகளை பார்வையிட்டனர். அப்போது பாதிக்கப்பட்ட மக்கள் உரிய இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். தொடர்ந்து காட்டுயானைகள் ஊருக்குள் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து கிராம மக்கள் கூறும்போது, காட்டுயானைகள் ஊருக்குள் வந்து விவசாய பயிர்களை தின்று வந்த நிலையில் தற்போது வீடுகளை உடைத்து அரிசி, பருப்புகள், காய்கறிகளை தின்று வருகிறது. எனவே காட்டுயானைகள் வருகையை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதேபோன்று பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட பிதிர்காடு அருகே பதினெட்டுகுன்னு பகுதியில் நேற்று முன்தினம் குட்டியுடன் 3 காட்டுயானைகள் புகுந்தன. அப்போது முஜீப்ரகுமான் என்பவரது வீட்டு நுழைவுவாயில் கதவை உடைத்து உள்ளே சென்றன. பின்னர் அங்கு நிறுத்தி வைத்திருந்த 2 கார்களையும் சேதப்படுத்தின. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த பிதிர்காடு வனச்சரகர் மனோகரன் தலைமையிலான வனத்துறையினர் விரைந்து வந்து காட்டுயானைகளை விரட்டியடித்தனர்.