செங்குன்றம்,
சென்னை கொளத்தூரை அடுத்த ராஜமங்கலம் கிருஷ்ணா நகர் 1-வது தெருவைச் சேர்ந்தவர் ராஜமுகுந்தன்(வயது 46). இவர், ராஜமங்கலம் விவேகானந்தா நகர் பிரதான சாலை அருகே மருந்து கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி புவனேஸ்வரி. இவர், மாதவரம் லட்சுமிபுரத்தில் உள்ள இவர்களது மருந்து கடையை நடத்தி வருகிறார். இவர்களுக்கு கிரிஷிகா(9) என்ற மகள் உள்ளார்.
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வீட்டு வேலை செய்வதற்காகவும், தங்கள் மகளை கவனித்து கொள்வதற்காகவும் மாதவரம் லட்சுமிபுரம் குமரன் தெருவைச் சேர்ந்த வேண்டா (40) என்ற பெண்ணை வீட்டு வேலைக்கு அமர்த்தினர்.
நேற்று முன்தினம் இருவரும் கடையை மூடிவிட்டு வீட்டுக்கு வந்தனர். அப்போது வீட்டின் பீரோ திறக்கப்பட்டு அதில் இருந்த 30 பவுன் தங்க நகைகள், 50 கிலோ மதிப்பிலான வெள்ளி பொருட்கள் திருட்டுபோய் இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் ராஜமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். அதில் வீட்டுக்கு 2 சாவிகள் இருப்பதும், ஒரு சாவியை வேலைக்கார பெண் வேண்டாவிடம் கொடுத்து வைத்ததும் தெரிந்தது.
இதையடுத்து வேலைக்கார பெண் மீது சந்தேகம் அடைந்த போலீசார், வேலைக்கார பெண் வேண்டாவை பிடித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மர்மநபர்கள் யாராவது அவரது வீட்டுக்குள் புகுந்து நகை, பணத்தை திருடிச் சென்றனரா? அல்லது வீட்டு வேலைக்கார பெண் வேண்டாதான் திருடினாரா? என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.