மாவட்ட செய்திகள்

தஞ்சையில் ஓய்வு பெற்ற அரசு அதிகாரியை தாக்கி மனைவியிடம் நகையை பறித்த கொள்ளையர்கள்

தஞ்சையில் ஓய்வு பெற்ற அரசு அதிகாரியை தாக்கி மனைவியிடம் நகையை பறித்து தப்பிய கொள்ளையர்களை பொதுமக்கள் விரட்டிச்சென்ற போது ஏரியில் குதித்தனர். இதில் 2 பேர் பிடிபட்டனர்.

தினத்தந்தி

தஞ்சாவூர்,

தஞ்சை ஞானப்பிரகாசம் நகரை சேர்ந்தவர் ராமதாஸ் (வயது 65). பொதுப்பணித்துறையில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். இவருடைய மனைவி ராஜாத்தி. இவர்களுடைய மகன் விநாயகம். இவர் தஞ்சை மாவட்ட சிவசேனா கட்சியின் இளைஞரணி தலைவராக உள்ளார்.

நேற்று அதிகாலை 2.30 மணி அளவில் ராமதாஸ் வீட்டின் அருகே 3 கொள்ளையர்கள் நின்று கொண்டு இருந்தனர். இதனைப்பார்த்த பக்கத்து வீட்டுக்காரர் ராமதாசுக்கு போனில் உங்கள் வீட்டின் முன்பு கொள்ளையர்கள் நிற்கிறார்கள் என தகவல் தெரிவித்துள்ளார்.

முன்னதாக கொள்ளையர்கள் ராமதாஸ் வீட்டின் காம்பவுண்ட் சுவர் கேட்டின் பூட்டை உடைத்து உள்ளே வந்துள்ளனர். மேலும் வீட்டில் இருந்த இரும்பு கேட் பூட்டையும் உடைத்துக்கொண்டு கதவு அருகே நின்றனர். இதனை சற்றும் எதிர்பார்க்காத ராமதாஸ் கதவை திறந்த போது முகமூடி அணிந்து நின்ற 3 கொள்ளையர்கள் அவரை தள்ளிக்கொண்டு உள்ளே செல்ல முயன்றனர்.

சுதாரித்துக்கொண்ட ராமதாஸ் கதவை சாத்தினார். அதற்குள் கொள்ளையர்கள் 3 பேரும் கீழே விழுந்தனர். பின்னர் கொள்ளையர்கள் எழுந்து கதவை தள்ளினர். அதற்குள் சத்தம் கேட்டு ராமதாஸ் மனைவி ராஜாத்தி, விநாயகம் ஆகியோரும் அங்கு வந்தனர். விநாயகத்தை பார்த்ததும் கொள்ளையர்களில் ஒருவன் அரிவாளால் வெட்ட முயன்றுள்ளான். இதைப்பார்த்த விநாயகம் அவனை காலால் எட்டி உதைத்துள்ளார். அவன் கீழே விழுந்தான். விநாயகத்தின் முதுகிலும் அடி விழுந்தது. அதற்குள் மற்றொரு கொள்ளையன் சுளுக்கியால் ராமதாசை குத்த முயன்றான். அவர் விலகியதால் உடலின் பக்கவாட்டில் லேசான காயம் ஏற்பட்டது.

அதற்குள் இன்னொருவன் ராஜாத்தியின் கழுத்தில் கிடந்த 7 பவுன்சங்கிலியை பறித்தான். பின்னர் 3 கொள்ளையர்களும் அங்கிருந்து தப்பி ஓடினர். அதற்குள் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினரும் ஓடி வந்தனர். உடனே விநாயகம் மற்றும் பொதுமக்கள் கொள்ளையர்களை விரட்டினர். அருகில் உள்ள ரெயில்வே தண்டவாளம் வழியாக ஓடிய கொள்ளையர்களில் 3 பேர் யாரும் எதிர்பார்க்காத வகையில் தப்பிப்பதற்காக சமுத்திரம் ஏரிக்குள் குதித்தனர்.

அதற்குள் தஞ்சை தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்து அவர்களும் சம்பவ இடத்திற்கு வந்தனர். ஏரியின் ஒரு பகுதியில் குதித்து தப்பி ஓடிய ராயமுண்டான்பட்டியை சேர்ந்த பிரகாஷ் (37) என்பவரை பொதுமக்கள் மற்றும் போலீசார் மடக்கிப்பிடித்தனர். இருள்சூழ்ந்து இருந்ததால் ஏரியின் மற்றொரு பகுதியில் குதித்த 2 கொள்ளையர் களையும் தேடுவதில் சிரமம் ஏற்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்த வல்லம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் மற்றும் தாலுகா போலீசாரும் சம்பவ இடத்திற்கு வந்தனர். போலீசார் தண்ணீருக்குள் இறங்கி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஹெலி கேமரா மூலமும் கொள்ளையர்களை போலீசார் தேடினர். அதன்அடிப்படையில் ஏரியின் நடுவில் ஆகாயத்தாமரைக்குள் பதுங்கி இருந்த செங்கிப்பட்டி அருகே உள்ள ஆவாரம்பட்டியை சேர்ந்த குஞ்சப்பன் மகன் அறிவழகனை மதியம் 1.45 மணி அளவில் போலீசார் பிடித்தனர். அவனிடம் நடத்திய விசாரணையில் ஆவாரம்பட்டியை சேர்ந்த வீரையன் ஆகாயத்தாமரை செடிகளுக்குள் பதுங்கி இருப்பது தெரிய வந்தது. அவனை தொடர்ந்து போலீசார் தேடி வருகிறார்கள்.

இது குறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, பிரகாஷ், அறிவழகன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். இந்த தகவல் அறிந்ததும் அந்த பகுதியில் ஏராளமான பொதுமக்களும் திரண்டனர். சினிமாவை மிஞ்சும் வகையில் நடந்த இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு