ஊத்துக்கோட்டை,
தமிழகத்தில் தற்போது கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. சென்னை, காஞ்சீபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் நிலவிவரும் கடும் வெயிலால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருகிறது. தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில் கோடையை குளிர்விக்கும் வகையில் தற்போது தமிழ்நாட்டில் சில இடங்களில் கோடை மழை பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருவள்ளூர், ஈக்காடு, மணவாளநகர், திருப்பாச்சூர், கடம்பத்தூர், பேரம்பாக்கம், புதுமாவிலங்கை, அகரம், மப்பேடு, கூவம் போன்ற சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் ஆங்காங்கே ஆலங்கட்டி மழை பெய்தது. கோடை வெயிலில் நேற்று மழை பெய்ததால் சாலையில் ஆங்காங்கே மழைநீர் தேங்கி நின்றது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை சுற்றுவட்டாரப்பகுதிகளில் நேற்று மதியம் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை சுமார் 1 மணி நேரம் பெய்தது. இதன் காரணமாக சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. தாழ்வான பகுதிகளில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கியதால் அப்பகுதி மக்கள் அவதிப்பட்டனர்.
கடந்த சில நாட்களாக சுட்டெரிக்கும் வெயிலில் அவதிப்பட்டு வந்த பொதுமக்கள் ஆலங்கட்டி மழையால் மகிழ்ச்சி அடைந்தனர். மழை நின்ற பிறகும் இதமான குளிர்ந்த காற்று வீசியது. ஊத்துக்கோட்டை, சென்னேரி, கரடிபுத்தூர், சீதஞ்சேரி, அம்மம்பாக்கம், நசராரெட்டிகண்டிகை, புதுகுப்பம், ஆம்பாக்கம், பேரடம், சிறுவனம்புதூர், மதனம்பேடு, நெல்லிமித்திகண்டிகை, காரணி ஆகிய பகுதிகளில் விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பில் மாந்தோப்புகளில் மாம்பழம் சாகுபடி செய்து வருகின்றனர்.
தற்போது அறுவடை நேரமான நிலையில் வீசிய சூறாவளி காற்றினால் அறுவடைக்கு தயாராக இருந்த மாங்கனிகள் பெரும் சேதமடைந்தன. இதனால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் அரசு தங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்
இதே போல் காஞ்சீபுரத்திலும் நேற்று பலத்தமழை பெய்தது. சூறைக்காற்று வீசியதால், சில இடங்களில் மரங்கள் சரிந்து விழுந்தன. சில இடங்களில் ஆலங்கட்டி மழையும் பெய்தது.
சென்னை வேளச்சேரியை சேர்ந்தவர் வினோத் வயது (35). இவர் சென்னை சிறுசேரியில் உள்ள மென்பொருள் நிறுவனத்த்ல் என்ஜினீயராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று தன் குடும்பத்தாருடன் ஊத்துக்கோட்டை உள்ள கோவிலுக்கு சென்றார், அப்போது ஊத்துக்கோட்டை நகர எல்லையில் உள்ள சாலையின் ஓரமாக காரை நிறுத்தினார். அப்போது கருமேகங்கள் சூழ்ந்து கொண்டு திடீர் என்று சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்ததில், அங்கு இருந்த வேப்ப மரம் வேரோடு சாய்ந்தது.
இதில் காரின் பின் பகுதி சேதம் அடைந்தது. அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் கிளைகளை வெட்டி பிறகு காரில் இருந்த வினோத், மற்றும் அவரது மனைவி உறவினர்கள் உள்பட 5 பேரை வெளியே கொண்டு வந்தனர். வேப்ப மரம் வேரோடு சாய்ந்ததால் ஊத்துக்கோட்டை- திருப்பதி இடையே வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் கிடைத்த உடன் நாகலாபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சாலையின் குறுக்கே சரிந்த மரத்தை பொக்லைன் எந்திரம் மூலம் அப்புறப்படுத்திய பின்னர் வாகன போக்கு வரத்து சீர் அடைந்தது.