மாவட்ட செய்திகள்

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து பல்வேறு கட்சிகள், அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து சேலத்தில் பல்வேறு கட்சியினர், அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தினத்தந்தி

சேலம்,

தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு அமைப்புகள் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டு வருகின்றன.

அதன்படி தமிழ்தேச மக்கள் முன்னணி சார்பில் சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் சீனிவாசன், தலைமை செயற்குழு உறுப்பினர் விநாயகம், தமிழ்நாடு இளைஞர் இயக்கத்தின் மாவட்ட அமைப்பாளர் மூர்த்தி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநகர் மாவட்ட துணை செயலாளர் காஜா மைதீன் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர், அவர்கள் தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்தும், ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரியும் கோஷங்களை எழுப்பினர்.

இந்திய புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து சேலம் தலைமை தபால் நிலையம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாநில தலைவர் ராஜகோபால் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் ராஜ், கலைவாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் அந்த கட்சியை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்தும், ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரியும் அயோத்தியாப்பட்டணத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு ஒன்றிய தலைவர் சுரேஷ் தலைமை தாங்கினார்.

வாழப்பாடி பஸ் நிலையத்தில் சேலம் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட தலைவர் அர்த்தநாரி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தது. இதில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் மாவட்ட பொது செயலாளர் தங்கராஜ், மாணவர் காங்கிரஸ் மனோஜ்குமார், மாவட்ட துணைத்தலைவர் முனுசாமி உள்பட காங்கிரசார் பலர் கலந்து கொண்டனர்.

ஓமலூர் பஸ்நிலையம் காந்தி சிலை அருகே சேலம் வடக்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயலாளர் வசந்த் தலைமை தாங்கினார். இதே போல ஓமலூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு தாலுகா செயலாளர் ஈஸ்வரன் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட குழு உறுப்பினர் பரமேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது தமிழக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்